ஞானசார தேரரின் எஞ்சிய 5 வருட சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட 6 வருட கடூழிய சிறைத்தண்டனையில் எஞ்சிய 5 வருட காலப்பகுதியை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (5) சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு 2016ஆம் ஆண்டு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டமைக்காக 2018ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஞானசார தேரருக்கு 6 வருடங்களில் அனுபவித்து முடிக்கும் வகையில் 19 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இருப்பினும், 2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பின் மூலம் அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குறித்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது எனத் தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலையாகாத தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்தது.

இந்தப் பிடியாணைக்கு அமைய, கடந்த 3ஆம் திகதி இரவு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அதன்போதே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட எஞ்சிய சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, தனக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை குறித்துக் கருத்து வெளியிட ஒரு நிமிட அவகாசம் கோரிய பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரின் கோரிக்கையை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ஏகமனதாக நிராகரித்துள்ளது.

எஞ்சிய சிறைத்தண்டனையைக் கழிப்பதற்காகச் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் அவர் இக்கோரிக்கையை விடுத்திருந்தார்.

இருப்பினும், அதனை நிராகரித்த நீதிமன்றம், அவரைச் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு உத்தரவிட்டது.

இதேவேளை நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து விசேட அதிரடிப்படைப் பாதுகாப்போடு வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதே, சிறைச்சாலை வாகனத்தில் ஏற்றப்பட்ட ஞானசார தேரர் ஊடகங்களுக்குக் காரசாரமாகக் கருத்துத் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள பௌத்த பிக்குகள் இதையொரு நல்ல பாடமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நாட்டின் நன்மைக்காகவே நான் இந்தத் தியாகங்களைச் செய்தேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தன்னைச் சிறையில் அடைத்துவிட்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடுமா? உண்மையைப் பேசுவதற்கு நாங்கள் பயப்பட வேண்டுமா? நாட்டின் நலனுக்காகவே தியாகங்களைச் செய்தோம்; நாங்கள் யாருக்கும் கடனுமில்லை, எவருக்கும் பயமுமில்லை” என அவர் உரத்த குரலில் முழக்கமிட்டமை குறிப்பிடத்தக்கது.