தமிழரசுக் கட்சி நிர்வாக குழு தெரிவு தொடர்பான வழக்கை உடனடியாக மீளப்பெறத் தயார் என்று மனுதாரர் தரப்பு அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாக சபைத் தெரிவு தொடர்பான வழக்கை மேலும் நீடிக்க விரும்பவில்லை என்றும், கட்சியின் யாப்புக்கு அமைவாக 156 உறுப்பினர்களின் வாக்குகளுடன் நிர்வாக சபைத் தெரிவை நடத்த கட்சித் தலைமை உறுதியளித்தால் அதனை மீளப் பெற தயார் என மனுதாரர் தரப்பு அறிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சாம்பல்தீவு வட்டாரக் கிளைச் செயலாளர் சந்திரசேகரம் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த்த தகவலைத் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தலில் எஸ். சிறிதரன் வெற்றி பெற்றிருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருகோணமலையில் தேசிய மாநாட்டை நடத்தி புதிய நிர்வாகிகளை அறிவிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தேர்தல் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாகவும் யாப்பு விதிகள் மீறப்பட்டதாகவும் தெரிவித்து கட்சி உறுப்பினர்கள் சிலர் நீதிமன்றத்தை நாடினர்.
திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேசிய மாநாட்டை நடத்துவதற்கும் புதிய நிர்வாகிகளின் தெரிவை நடைமுறைப்படுத்துவதற்கும் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
இந்தத் தடை உத்தரவுகள் காரணமாக புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகிகளால் தமது பொறுப்புகளை ஏற்க முடியாத சூழல் உருவானதுடன், கட்சியின் உள்நிர்வாக நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியான முடக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



