வடபகுதி மீனவர்களின் பிரச்சினைகள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் கலந்துரையாடுவதற்கு அவசியமான ஏற்பாடுகளைச் செய்து தருவதாக இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் உறுதியளித்துள்ளார்.
வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நேற்று (21) நடைபெற்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க் கண்காட்சியில் கலந்துகொள்ள வருகை தந்திருந்த அவரை, வடக்கு மாகாண மீனவ சங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது கருத்து வெளியிட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள், தமிழக மீனவர்களின் தொடர் அத்துமீறல்களாலும் இழுவை மடிப் படகுகளாலும் தமது மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினர்.
அத்துடன், இந்தியா மற்றும் தமிழக உறவுகளை நம்பியே வடக்கில் சீனாவின் அட்டைப்பண்ணை உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்துத் தமது சொந்தப் பணத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாகவும், தமக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைக் கேட்டறிந்த தொல். திருமாவளவன், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் இங்கு இன அழிப்பு இடம்பெற்றுள்ளது என்பது குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதற்கு முதலமைச்சருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தமிழ்நாட்டுக்குச் செல்லும்போது முதலமைச்சரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதாக அவர் உறுதியளித்தார்.
மேலும், தமிழக மீனவர்களின் அத்துமீறல்களால் வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளைத் தாம் தற்போது தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்துரையாடி உரிய பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்வேன் என்றும் தொல். திருமாவளவன் மேலும் தெரிவித்தார்.



