இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்.
கண்டி அஸ்கிரி மகா விகாரையில் நடைபெறும் அரச கடின சீவர பூஜை புண்ணிய உற்சவத்தில் தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் அரச பிரதிநிதியாகப் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த தாய்லாந்து பிரதிப் பிரதமரை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிநேகபூர்வமாக வரவேற்றார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று, கலாசார மற்றும் மத ரீதியான உறவுகள் இவ்வாறான இராஜதந்திர விஜயங்களின் மூலம் மேலும் வலுப்பெறும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மேலும், தாய்லாந்து பிரதமரும் இலங்கைக்கு விஜயம் செய்ய விருப்பத்துடன் உள்ளதாக பிரதிப் பிரதமர் தெரிவித்ததையடுத்து, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெராவை பார்வையிட வருமாறு தாய்லாந்து பிரதமருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். அதேபோன்று, எதிர்காலத்தில் தாய்லாந்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு தாய்லாந்து பிரதிப் பிரதமரும் அழைப்பு விடுத்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, விவசாயம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து தலைவர்கள் கலந்துரையாடினர்.
இதன் முக்கிய கட்டமாக, சுற்றுலா நடவடிக்கைகளை எளிதாக்குதல் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. தாய்லாந்து பிரதிப் பிரதமர் சிஹாசக் புவாங்கெட்கியோவ் மற்றும் இலங்கையின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையில் இந்த ஒப்பந்தம் பரிமாற்றம் செய்யப்பட்டது. இது இரு நாடுகளினதும் சுற்றுலா மற்றும் வர்த்தக மேம்பாட்டிற்குப் பெரிதும் உதவும் என தாய்லாந்து பிரதிப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பில் இலங்கை சார்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரவி செனெவிரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமரி ரொட்ரிகோ ஆகியோர் கலந்துகொண்டனர்.
தாய்லாந்து அரசாங்கத்தின் சார்பில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன், வெளிவிவகார அமைச்சரின் செயலாளர் போர்ன்போங் கனித்தானோன், தெற்காசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம் உராசா மொங்கோல்நவின், தகவல் பணிப்பாளர் நாயகம் ஜெய்தாய் உபகார்னிதிக்செட், தெற்காசிய விவகாரங்களுக்கான பணிப்பாளர் கசெம்சன் தோங்சிரி மற்றும் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் பணிப்பாளர் சடுடீ புங்பொங்டீ ஆகியோரும் பங்கேற்றனர்.



