.மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு வளாகம் அங்குரார்ப்பணம்!

மாவீரர் வாரத்தை முன்னிட்டு நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மன்னார்,திருகோணமலை மற்றும் கொக்கட்டிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் மாவீரரிகளின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.

இதேவேளை, யாழ்ப்பாணம் – நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள பகுதிகளில், மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் அடங்கிய நினைவு வளாகம் மக்கள் அஞ்சலிக்காக நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் நேற்று இரவு 7 மணியளவில் இந்த நினைவாலயம் திறந்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி வரை இந்த வளாகம் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

1982ஆம் ஆண்டு முதல் விடுதலை அமைப்பில் இணைந்து உயிரிழந்தவர்களின் விபரங்களுடன், தனிக்குழுக்கள், ஈரோஸ் அமைப்பு, எல்லைப் படை வீரர்கள், உதவி வீரர்கள், நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் மாமனிதர்கள் எனப் பல்வேறு தரப்பினரின் விபரங்களையும் உள்ளடக்கி இந்த வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 67 நினைவுக் கல்லறைகளில் 28,341 பேரின் பெயர் விபரங்களும், அவர்களுக்கான தனித்துவ அடையாளங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

இதனுடன் மாவீரர் நாள் வரலாறு, துயிலுமில்ல வரலாறு, துயிலுமில்லங்கள் தொடர்பான விபரங்கள் மற்றும் பல்வேறு புள்ளிவிபரங்கள் எனப் பல வரலாற்றுத் தகவல்களைத் தாங்கிய ஓர் ஆவணப் பெட்டகமாகவும் இந்த வளாகம் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தமது பிள்ளைகளின் படங்களைப் பொதுமக்களின் அஞ்சலிக்காகக் காட்சிப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.