வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய நான்கு மாகாணங்களுக்கான மாகாண சபைத் தேர்தல்களை 2027ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்ச்சியாகப் பிற்போடப்பட்டு வருவது குறித்தும், அது தொடர்பாக ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும் தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத் தரப்பிடம் தமது அதிருப்தியை வெளிப்படுத்திய போதே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட மற்றும் நிர்வாக அலகு ரீதியான சிக்கல்களுக்குத் தீர்வு காணும் வகையில், குறித்த பாராளுமன்ற விசேட செயற்குழுவின் முன்னிலையில் ஐந்து தடவைகள் முன்னிலையாகி தமது யோசனைகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆயினும், அந்த பரிந்துரைகளுக்கு அமைய இதுவரை உரிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் தமது விதப்புரை அறிக்கையைச் சமர்ப்பிப்பதாகக் குறிப்பிட்டிருந்த பாராளுமன்ற விசேட செயற்குழுவின் பதவிக்காலம், எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினமாவது அறிக்கை சமர்ப்பிக்கப்படுமா எனத் தேர்தல்கள் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்குப் பதிலளித்த அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர், மாகாண சபைத் தேர்தல் முறைமையில் உள்ள அடிப்படைச் சட்ட மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டவுடன் தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் தேர்தலை நடத்தினால் நிர்வாகக் கட்டமைப்பில் குளறுபடிகள் ஏற்படும் எனக் குறிப்பிட்ட அவர், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் 2027 நடுப்பகுதியில் குறித்த நான்கு மாகாணங்களுக்கும் தேர்தலை நடத்த உத்தேசித்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.



