யாழ்ப்பாணம் நல்லூர் நினைவிடத்தில் இருந்து அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனின் சிலை, இன்று வெள்ளைத் துணியால் மூடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி நல்லூரில் நினைவேந்தலுக்காக வைக்கப்பட்டிருந்த இந்தச் சிலையைக் பொலிஸார் வலுக்கட்டாயமாக அகற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து இது தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்து சிலையை நீதிமன்றத்தில் ஒப்படைக்க பொலிஸார் அனுமதி கோரியிருந்தனர்.
எனினும், வழக்கில் சந்தேக நபர்கள் எவரும் குறிப்பிடப்படாததால் சிலையை ஏற்க நீதிமன்றம் ஆரம்பத்தில் மறுப்புத் தெரிவித்து வழக்கை ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், கடந்த 8 நாட்களாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை, இன்று பொலிஸ் வாகனத்தில் வெள்ளைத் துணியால் மூடப்பட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் அது உத்தியோகபூர்வமாக நீதிமன்ற காவலில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, தியாக தீபம் திலீபனின் சிலையை நிறுவியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக தியாக தீபத்தின் நினைவேந்தல் கட்டமைப்பை சேர்ந்த பொன் மாஸ்டர் எனப்படும் பொன். குணரட்னம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தியாக தீபத்தின் ஆவண காப்பக செயற்பாட்டாளர் வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப. மயூரன் ஆகிய நால்வருக்கு யாழ்ப்பாணம் பொலிஸார் அழைப்பாணை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, வரதராஜா பார்த்தீபன் மற்றும் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் ஆகிய இருவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் உபசெயலாளர் சட்டத்தரணி வி. மணிவண்ணனுடன் இன்று காலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலமளிக்க முன்னிலையாகியுள்ளனர்.



