உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதனை அதிபர் விளாடிமிர் புதின் வரவேற்றுள்ளதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
டெல்லியில் பிரிக்ஸ் மாநாட்டின் போது ரஷ்ய செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் கூறியதாவது: உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு இதுவரை எந்தப்பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், மோடி, ஜி ஜின்பிங் உக்ரைன் போரை நிறுத்த விருப்பம் தெரிவித்துள்ள செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மாநாட்டின் முதல் நாளில் மோடி, ஜி ஜின்பிங் மற்றும் புதின் ஆகிய மூவரும் கைகோர்த்து நின்ற காட்சி, உலக அரங்கில் அவர்களின் நெருக்கமான உறவையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது எனக் கூறப்படுகின்றது.



