ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து வெளிவந்துள்ள எதிர்வினைகள், போருக்குப் பின்னரான இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் தொடர்பான பிற்போக்கு நிலைமையை மீண்டு மொருமுறை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் உலக அரங்கில் அம்பலப்படுத்தியுள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் கொள்கைகள், தேசிய அரசியல் யதார்த்தங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் நீதிக்கான ஏக்கம் ஆகியவற்றுக்கு இடையிலான முரண் பாடுகளை இந்த அறிக்கை கொண்டிருந்தாலும், இலங்கை யின் தேசியப் பிரச்சினைகளுக்கான அடிப்படையை அடி யோடு கைவிட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல் கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கையை வாசித்த பிரதி உயர்ஸ்தானிகர் அவா டபோ, இலங்கையின் பொறுப்புக் கூறல் செயன்முறையில் நிலவும் தேக்கநிலையைச் சுட்டிக்காட்டியதோடு, புதிய அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளுக்கும் களத்தில் காணப்படும் உண்மை நிலவரங் களுக்கும் இடையிலான இடைவெளியை அம்பலப் படுத்தியுள்ளார்.
அதேநேரம், சர்வதேச அழுத்தங்களை வழக்கம் போல நிராகரிக்கும் இலங்கை அரசாங்கத்தின் அணுகு முறையானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நம்பிக்கையை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் அவா டபோ சமர்ப்பித்த அறிக்கையில், சர்வதேச மட்டத்தில் அதிகரித்துவரும் ஆயுத மோதல்கள் மற்றும் சர்வதேச சட்டங்கள் மீறப்படுவது குறித்து எச்சரிக்கப்பட்ட போதிலும், இலங்கை விவகாரத்தில் நிலவும் மந்தகதியே பிரதானமாக அவதானிக்கப்பட்டது.
இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிப்பீட மேறியபோது நல்லிணக்கத்தையும் நீதியையும் நிலை நாட்டுவதற்கு வலுவான மக்களாணை கிடைத்ததாகச் சுட்டிக்காட்டப்பட்ட போதிலும், 2009ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆயுத மோதலின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அரச படையினரோ அல்லது தமிழீழ விடுதலைப்புலிகளோ இன்னமும் பொறுப்புக்கூற வைக்கப்படவில்லை என்பது அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் தியாகராஜா ரவீந்திரநாத் படுகொலை தொடர்பான விசாரணைகள் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் எட்டப்பட்ட சில கைதுகள் நேர்மறையான நகர்வுகளாக அடையாளப்படுத்தப்பட்டாலும், ஒட்டுமொத்தக் குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்து தாமதமடைந்து வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்பு முழுமையாக எதிர்க்கும் ‘சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம்’ ஸ்தா பிக்கப்படாமை, பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்ந்தும் பிரயோகிக்கப்படுகின்றமை, வடக்கு, கிழக்கில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீதான கண்காணிப்புகள் தொடர்வது ஆகியவை இலங் கையின் ஜனநாயக வெளியை இன்னமும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளன.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையீனம், கண்டறியப்படும் மனிதப்புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற கேள்விகளுக்குப் பதிலின்மை என்பன, இலங்கை அரசு உள்நாட்டுப் பொறிமுறைகளில் எந்தளவுக்குத் தோற்றுப்போயுள்ளது என்பதை வெளிப் படுத்தியுள்ளன.
இதற்குப் பதிலாக, ஐ.நா. மனித உரிமைகள் பேர வையின் 60-1 தீர்மானத்தின் கீழ் இயங்கும் ‘இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை’ இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. ஜெனிவாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சுமித் திசாநாயக்க உரை நிகழ்த்துகையில், இத்தகைய வெளியகப் பொறிமுறைகள் நாட்டில் இனத்துருவமயப்படுத்தலையும் பிளவுகளையும் ஏற்படுத்தும் என்று வாதிட்டுள்ளார்.
உள்நாட்டுப் பொறிமுறைக்கே தாம் முன்னுரிமை அளிப்பதாகக் கூறும் அரசாங்கம், நடைமுறையில் எந்த வொரு நம்பகமான உள்ளக விசாரணையையும் முன்னெடுக் கத் தவறியுள்ளது என்பதே கசப்பான உண்மையாகும்.
கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய அநுரகுமார திசாநாயக்க தலைமைகள் வரை, ஜெனிவா தீர்மானங்களை நிராகரிப்பது அல்லது ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தாமல் தவிர்ப்பது என்ற விடயத்தில் ஒரே மாதிரியான தந்திரோபாயத்தையே பின்பற்றி வருகின்றனர்.
அத்தகைய அரசியல் சூதாட்டங்களின் மத்தியில், சர்வதேசப் பொறிமுறைகளின் மூலமாக மட்டுமே தமக்கு நீதி கிடைக்கும் என்ற பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் தீவிரமான நம்பிக்கை மீண்டும் ஒருமுறை சிதைக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா தலைமையிலான இணையனு சரணை நாடுகளும் முக்கிய வழக்கு விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாததைக் கண்டித்து, தனது கடப்பாடுகளை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தியுள்ளன. இருப்பினும், வெளியகப் பொறிமுறை எதுவுமின்றி, வெறும் தேசியப் பொறிமுறைகளை மட்டும் சர்வதேச சமூகம் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்க வேண்டும் என்ற இலங்கையின் எதிர்பார்ப்பு, நீதிக்கான அனைத்து வழிகளையும் மூடுவதாகவே உள்ளது.
இதனிடையே, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா போன்ற இராணுவ உயரதி காரிகள் சர்வதேச ஊடகங்களில் தோன்றி, தாம் போர்க் குற்றவாளி அல்ல என்று வாதாடுவதும், போரின்போது பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்கள் இலக்கு வைக்கப்படவில்லை எனக் கூறுவதும், இலங்கை இராணுவத் தலைமையின் பொறுப்புக்கூறலற்ற மனப்போக்கையே வெளிப்படுத்துகிறது.
அமெரிக்க நீதிமன்றத்தில் தனக்கெதிராகத் தொடரப்பட்ட வழக்கில், தான் குற்றமற்றவர் என நிரூபிப்பதைத் தவிர்த்து, இராஜதந்திர விலக்குரிமையைப் பயன்படுத்தித் தப்பித்த சவேந்திர சில்வா, இன்று சர்வதேச விசாரணைகளுக்கு முகங்கொடுக்காமல் மறுப்புத் தெரிவிப்பது முரண்பாடானதாகும்.
இராணுவத்தினரைத் தண்டனையிலிருந்து பாது காக்கும் அரசாங்கங்களின் அரசியல் அச்சமும், சர்வதேசப் பொறிமுறைகளை சமூகப் பிளவு எனக் காரணம் காட்டி நிராகரிக்கும் போக்கும், இலங்கையில் மெய்யான நல்லி ணக்கம் ஒருபோதும் சாத்தியமில்லை என்பதையே காட்டு கின்றன.
ஜெனிவாவில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளும், அதைத்தொடர்ந்து இடம்பெறும் விவாதங்களும் வெறும் வார்த்தை ஜாலங்களாகவும், அறிக்கைப் போராகவுமே சுருங்கிப் போய்விட்டன.
உள்நாட்டில் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் வரவு செலவுத்திட்ட ஒதுக்கீடுகள் மூலம் நாட்டை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் முயன்றாலும், கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு உண்மையான நீதியையும் பொறுப்புக்கூறலையும் வழங்காத வரை, எந்தவொரு ஆட்சியினாலும் நாட்டில் உண்மையான சமாதானத்தையோ அல்லது சமூக ஒருமைப்பாட்டையோ கட்டியெழுப்ப முடியாது.
தண்டனையிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்படாத வரை, ஜெனிவா அறிக் கைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தொடர்ச்சியான ஏமாற்றத்தையே பரிசளித்துக் கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கடந்த 17 ஆண்டுகளாக ஜெனிவாவைக் கையாளல் என்ற பெயரில் பல தரப்புகள் செயற்பட்டிருந்தன. இதில் சில இன்னமும் செயற்பட்டுக்கொண்டுதான் இருக் கின்றன. ஆனால், குறித்த தரப்புகளின் செயற்பாடுகளால் ஜெனிவா அறிக்கையில் ஆகக்குறைந்தது இலங்கையில் தேசிய இனப்பிரச்சினையொன்று காணப்படுகின்றது என்ற விடயத்தைக்கூட தக்கவைத்துக்கொள்வதற்கு முடியாது போயிருக்கின்றது.
தற்போதைய பூகோளச் சூழலில் சாட்சியங்களைத் திரட்டும் பொறிமுறை கூட வினைத்திறனுடன் இயங்கு வதற்குரிய சூழல்களைக் கொண்டிருக்கவில்லை. இந்தத் தருணத்தில்தான் இலங்கை அரசாங்கமும் அதனை நிராகரிக்கின்றது. இப்படியொரு தருணத்தில் ஜெனிவாவை எவ்வாறு யதார்த்தமாகக் கையாள முடியும் என்பது பற்றிய மீளாய்வு என்பது அவசியமாகின்றது. இந்த மீளாய்வு மூலம்தான் அடுத்துவரும் ஜெனிவா அமர்வுகள் நீதி தேடும் மக்களுக்கு அர்த்தமானவையாக இருக்க முடியும்.



