இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை!

இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மாணவர்களை சேர்ப்பதிலும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் 2025 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு சேர்ப்பதிலும் இந்தப் பற்றாக்குறை பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமென பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் உதவிச் செயலாளர் பேராசிரியர் அருண வன்னிநாயக்க ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

குறைந்த சம்பளம், அதிக வரி மற்றும் குறைந்த சலுகைகள் காரணமாக அரச பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வியாளர்கள் வெளிநாடுகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களை நோக்கிச் செல்கின்றனர்.

இதனால் ஓய்வு பெறும் அல்லது பணியை விட்டு விலகும் விரிவுரையாளர்களின் இடங்களை நிரப்புவதிலும் பல்கலைக்கழகங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தீர்க்க கல்வியாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தது 50 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும், வரிச்சுமையை குறைக்க வேண்டும் மற்றும் ஏனைய சலுகைகளை விரிவுப்படுத்த வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த புதன்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்திலும் ஈடுபட்டது.

இதேவேளை, புதிதாக 50 அரச பல்கலைக்கழகங்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், முதலில் தற்போது உள்ள 17 அரச பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் விரிவுரையாளர் நியமனம் தொடர்பிலான இழுப்பறி நிலை தொடருமானால் அரச பல்கலைக்கழக முறைமை பாதிக்கப்படலாம் என்றும், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றார்