செம்மணிக்கு சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி பிரகடனம் வெளியீடு

செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித என்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சான்றுப் பொருட்களாக வெளிவந்துள்ள நிலையில் சர்வதேச நீதிகோரி நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்ற பேரணியின் நிறைவில் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை வேண்டும்: செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித என்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளிவந்துள்ளன.

இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துள்ளதாக அந்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, மன்னார் மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல், அகழ்ந்தெடுக்கப்படும் தடயங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்றும் குறித்த பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு உள்ளக விசாரணைப் பொறிமுறையை முற்றாக நிராகரிப்பதுடன், சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை உடனடியாக ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசினால் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பாக சில அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட ஆவணங்களும், ஆதாரங்களும், சர்வதேச குற்றவியல் விசாரணை ஒன்றுக்காக பாரப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதிகோரும் உள்ளகப் பொறிமுறைகளை நாம் முற்றாக நிராகரிப்பதுடன், அதற்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தண்டனை அனுபவித்துவரும் அரசியல் கைதிகள் அனைவரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்படவும் வேண்டும்.

அத்துடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவானது என்னும் பெயரில் வேறு எந்தவொரு புதிய சட்டத்தையும் உருவாக்கக்கூடாது.

வடக்கு–கிழக்கு தமிழர் தாயகத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையிலான இராணுவமயமாக்கல் அகற்றப்படல் வேண்டும்.

அம்பாறை தொடக்கம் மன்னார் வரை வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழர்களின் தொன்மையான வரலாறு, கலை, பண்பாடு மற்றும் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தொல்லியல் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, பௌத்த கலாசார திணைக்களம், வனவள, வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் கட்டமைப்புசார் இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் உடனடியாக அகற்றப்படவும் நிறுத்தப்படவும் வேண்டும்.

தமிழினப் படுகொலை மீள நிகழாமல் இருப்பதனை உறுதிப்படுத்தவும், தொடரும் கட்டமைப்புசார் இனவழிப்பை நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும், நிலையான இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் – சிறீலங்காவின் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு முற்றாக நீக்கப்பட்டு, தமிழ்த் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வு எட்டப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.