கொழும்பு – தெஹிவளை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே பிரான்ச் (Marc-André Franche) அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், எந்தவொரு குழந்தையும் ஒருபோதும் இவ்வாறான வன்முறைக்கு பலியாகக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச் செயலுக்கு பொறுப்பானவர்கள் கட்டாயம் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா. பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் குறித்த வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் CCTV கருவிகளில் பதிவாகியிருந்தது.
தாக்குதலில் படுகாயமடைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் அவரது இரு மகன்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சம்பவத்தில் இரு சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
அவர்களது 55 வயதான தந்தை பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது



