வலி.வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்க கோரி பலாலி சந்தியில் நேற்றைய தினம் (13) 13ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வருதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாகவும் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரியும் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்படி, அண்மையில் காணி விடுவிப்பு தொடர்பில் பாராளுமன்றில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றுள்ள நிலையில், பலாலி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளை இந்த மாதத்திற்குள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



