இறைமையை மீளுறுதிப்படுத்த தொழில்நுட்பத் தேசியவாதப் பேரவைகள் – காலத்தின் தேவை | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 408

ஒரு நாட்டினுடைய தொழில்நுட்பத்தை புத்தாக்கம் செய்தல், தொழில்நுட்ப செயல்திறன், நாட்டின் தன்னிறைவுத்தன்மை என்பனவற்றை நேரடியாகவே நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி சமுக உறுதிப்பாடு என்பவற்றுடன் இணைத்து தொழில் நுட்பத் தேசிய வாதம் உருவாக்கப்படுகிறது.
இன்றைய உலக  அரசாங்கங்கள்  தொழில்நுட்பத்தை வெறுமனே வர்த்தக வளரச்சிக் கானதாக நடுநிலைத்தன்மையுடன் பார்க்காது உலக அரசியல் சக்தியுள் இணைவதற்கும் நாட்டின் தேசிய எதிர்ப்பாற்றலை பலப்படுத்துவதற்குமான முக்கிய கருவியாகப் பார்க்கின்றன.
இதற்கேற்ப எந்த நாட்டு அரசுடனும் அந்த அரசில் தொழில்நுட்பத் தேசியவாத வளர்ச்சியை ஏற்படுத்தி  பலமான அரசாங்கமாக மாற்றுதல் என்ற உத்தி வழியாகவே உலகின் வல்லரசுக்களும் பிராந்திய மேலாண்மைகளும் தங்கள் நாளாந்தத் தொடர்புகளை ஏற்படுத்தும் காலமாக இன்றைய காலம் காணப்படுகிறது.
இதற்கு இசையாத நாடுகள் மேல் பொருளாதார தடைகள் கடும் வரி விதிப்புக்கள் ஆட்சி மாற்றங்களுக்கு உதவுதல் இவற்றாலும் தாம் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் மறைமுகமான அல்லது நேரடியான போர் மூலம் தமது நோக்குகளை அடைதல் என்பதே இன்றைய உலகின் சமகால நோக்காவும் போக்காகவும் உள்ளது.
இந்நிலையினை ஈழத்தமிழ்த் தேசியத்தவர்களான ஈழத்தமிழர்கள் எவ்வாறு எதிர்கொள்வது? என்பதனை ஈழத்தமிழ் தேசியத்தவர்களாக  உலகஇனமாக உலகின் முக்கிய நாடுகளில் புலம்பதிந்து வாழும் ஈழத்தமிழர்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டிய பொறுப்பு உள்ளவர்களாக உள்ளனர் என்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
இந்நிலையில் ஈழத்தமிழ்த்தேசியத்தவர்கள் தமக்கான தொழில்நுட்பத் தேசியவாதத்தை உருவாக்கு வதற்கான வாய்ப்பினை அவர்களுடைய உலகளாவிய வாழ்வு உருவாக்கித் தருகிறது. இந்த உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ்த் தேசியத்தவர்களின் தொழில்நுட்பத் தேசியவாதப்பலம்  தாயக மக்களின் நாளாந்த வாழ்வுடன் ஒருங்கிணைக்கப்பட்டால் தொழில்நுட்ப தேசியவாதத்தில் ஈழத்தமிழர்கள் தங்கள் நிலையை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பது இலக்கின் எண்ணம். இதற்கு ஈழத்தமிழர் தொழில்நுட்பத் தேசிய வாத ஒருங்கிணைப்பு பேரவையை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து உருவாக்கல் என்பது  காலத்தின் தேவையாகிறது என இலக்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறது.
இந்தத் தொழில்நுட்பத் தேசியவாதப் பேரவையில் உலகெங்குமுள்ள  ஈழத்தமிழ்த் தேசியத்து மாணவர்கள், ஆசிரியர்கள், துறைசார் பட்டதாரிகள், உழைக்கும் வயதில் வாழ்பவர்கள், வர்த்தகர்கள், பெண் ஆளுமைகள், மூத்தகுடியினர் இந்த 7 வகையினரும் தனித்தனியான தொழில்நுட்பச் சமுகங்களாக கட்டமைக்கப்பட்டு அவர்களின் அறிவு ஆற்றல் உழைப்புத்திறன் மூலதனம் தொகுத்து வகைப்படுத்தப்பட வேண்டும். இந்த ஒவ்வொரு தொழில்நுட்ப தேசியவாத சமுகத்தவர்களும் அவர்களுடைய அறிவை ஆற்றலை உழைப்புத் திறனை மூலதனத்தை தாயகத்தில் உள்ள அதே வகையினருடன் பகிர்ந்து ஈழத்தமிழர்களின் தொழில்நுட்பத் தேசியவாதத்தை  கட்டியெழுப்புகையில் இது ஈழத்தமிழர் தாயகத் தேசநிர்மாணமாக பெருவளர்ச்சி பெறும் என்பது இலக்கின் எண்ணம்.
இந்த தொழில்நுட்பத் தேசியவாதத்தை குறித்த சிந்தனையை இவ்வாரத்தில் முன்வைப்பதற்குக் காரணம் ஆசிய ஆபிரிக்க நாடுகளின் அரசுக்களின் தொழில்நுட்பத் தேசிய வாதத் தேவையைப் பூர்த்தி செய்யும் பலம் பொருந்திய கட்டமைப்பாகத் திகழும்  பிரிக்ஸ் அமைப்பின் 18 வது மாநாடு இவ்வாரத்தில் 12ம் 13 ம் திகதிகளில் இந்தியாவில் டில்லியில் பாரத் மண்டபத்தில் இந்தியா 4வது தடவையாக பிரிக்ஸ் கட்டமைப்பிற்கு தலைமை வகிக்கும் நிலையில் இடம்பெற்றமையே ஆகும்.  இவ்வாரத்தின் உலகின் முக்கிய அரசியல் பொருளாதார தொழில் நுட்ப நிகழ்வாக இது அமைகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு பிரேசில் ரஸ்யா இந்தியா சீனா என்னும் நான்கு நாடுகளை கொண்ட அமைப்பாக மேற்குலக நாடுகளின் பொருளாதார மேலாண்மையைக் குறைத்து வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிடை வர்த்தகம் பொருளாதாரம் நிதி சார்ந்த ஒத்துழைப்பை வளர்க்க உருவானது பிரிக் (BRIC) இவ் அமைப்பு தொடங்கிய நாலாம் ஆண்டில் தென்னாபிரிக்கா இணைந்த பொழுது பிரிக்ஸ் (BRICS) எனப் பெயர் மாற்றம் பெற்றது. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு 2017 இல் சீனா தலைமைப் பொறுப்பில் இருந்த பொழுது பிரிக்ஸ் பிளஸ் என உறுப்பினர் விரிவாக்கத்துக்கு அனுமதியளிக்கப்பட்டதனால் 2024 இல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சவூதி அரேபியாவும் 2025 இல் இந்தோனேசியாவும் முழு உறுப்பினராக இணைந்து 11 நாடுகள் பிரிக்ஸின் முழுஅளவான உத்தியோக பூர்வமான முழுஅளவு உறுப்பினராகவுள்ள அமைப்பாக பிரிக்ஸ் பிளஸ் வளர்ச்சி கண்டது. தொடர்ந்து உத்தியோக உறுப்பு நாடாக இல்லாத பத்து நாடுகளான பெலாரஸ், பொலிவியா,கியூபா,கசகஸ்தான், மலேசியா நைஜிரியா தாய்லாந்து உகண்டா உஸ்பெக்கிஸ்தான் வியட்னாம் என்பன அவற்றின் உயர் ராஜதந்திரிகள் வர்த்தகப் பிரதிநிதிகள் உத்தியோக பூர்வ  பங்காண்மை நாடுகளாக பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்கின்றன. பாக்கிஸ்தான் பங்களாதேஸ் துருக்கி போன்ற நாடுகள் உட்பட பல நாடுகள் பிரிக்ஸ் இல் முழுஅளவான உறுப்பினராக உறுப்புரிமை பெற முயற்சிக்கின்றன. சிறிலங்காவும் தனது விருப்பை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று உலகின் மிகப்பெரிய கச்சாய் எண்ணெய் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் உள்ள அமைப்பாகத் திகழும் பிரிக்ஸ் பிளஸ் 1970கள் முதல் அமெரிக்காவால் பெட்ரோ டொலர் என்னும் அளவுக்கு டொலரில் கச்சாய் எண்ணெயின் விலை மதிப்பு செய்யப்பட்டு வரும் நிலையையும் மேற்குலக நாடுகள் சுவிஃற் (SWIFT)   நிதிப்பரிவர்த்தனையால் கச்சாய் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துவதையும் குறைக்க சீனாவின் யுவான் இந்தியாவின் ரூபாய் அரபு எமிரேட்ஸின் திர்ஹாம் மூலம் எண்ணெய் வர்த்தகம் செய்தல், டிஜிட்டல் நாணயங்கள் ( CBDCs) மற்றும் பிரிக்ஸ் பே  மூலம் நாடுகளிடை நேரடி நிதி பரிவர்த்தனை செய்தல் சந்தை விலை தளம்பலை குறைக்க உறுப்பு நாடுகளிடை குறைந்ததும் நிலையானதுமான விலை நிர்ணயத்தில் நீண்டகால எண்ணெய் வழங்கல் ஒப்பந்தங்களை செய்தல் என்பன பிரிக்ஸ் பிளஸ் நாடுகளிடை முயற்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் பலத்த பொருளாதாரப் பாதிப்புக்களுக்கு உள்ளாகுவதற்கு வாய்ப்புக்கள் உள. கூடவே இந்தியா சீனா பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறும். அத்துடன் இந்த இந்திய உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்குள் ஒரு புதிய ஆற்றல் பாதுகாப்பு நெட்வேர்க் அமைப்பது நடைமுறையானால் 21ம் நூற்றாண்டின் உலகப் பொருளாதாரம் டொலரில் தங்காத நிலை தோன்றும். இதுவே இன்றைய அமெரிக்காவை மீளவும் பெரிய அமெரிக்காவாக மாற்றுவதற்கான ட்ரம்பின் முயற்சிகளுக்கு மூலகாரணமாகவுள்ளது.
இந்தச் சூழலில் 2022 இல் ரஸ்ய உக்ரேன் போர் தொடங்கிய பின்னர் ரஸ்ய அதிபர் கலந்து கொள்ளும் முதலாவது மாநாடாகவும் ஈரானின் பிரதமர் அமெரிக்க இஸ்ரேல் கூட்டு ஆக்கிரமிப்பு போருக்கு மத்தியிலும் கலந்து கொள்ளும் மாநாடாகவும்  சீன அதிபர் இந்தியாவுக்கு வருகை தந்து கலந்து கொள்ளும் மாநாடாகவும் அரசியல் முக்கியத்துவம் பெறும் இம்மாநாட்டின் பாதுகாப்புக் கருதி டில்லியின் மேலான வான்வெளியை இந்தியா தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில் இம்மாநாடு இடம்பெறுகிறது. இது இந்தியாவின் படைத்துறையின் வான்வெளி வலிமையையும் இந்தியா வல்லரசு நாடாக வேகமாக வளர்ச்சியுற்று வருவதையும் உணர்த்துகிறது என்ற அரசியல் திறனாய்வுகள் எழுந்துள்ளன.
இப்புதிய  உலக அரசியல் ஒழுங்குமுறை பழைய உலக அரசியல் ஒழுங்குமுறை மாதிரி இல்லாது நாடுகளின் இறைமையை கூட்டு இறைமையாக மாற்றுகின்ற தன்மை கொண்டதாக வளர்ச்சி பெறுவதால் தேசஅரசுக்கள் என்ற நிலை இனி அரசக் கூட்டாண்மை கட்டங்கள் என்ற தாக மாறும். இந்நிலை மொழித்தேசியம், இனத்தேசியம், மதத்தேசியம், நிறத்தேசியம் என்பவற்றைக் கடந்து கட்டங்களின் தொழில்நுட்பத் தேசியம் என்பதாக பரிணாமடைந்த அரசியல் உலகையே தோற்றுவிக்கும். இந்த தொழில்நுட்பத் தேசியத்தின் பலத்திலேயே மக்களின் இறைமை தீர்மானிக்கப்படும். இன்று 1997 முதல் 2010 வரை பிறந்தவர்களாக 16 முதல் 29 வரை வயதுடைய ஜென்சீ பரம்பரையுடையது சமகாலம். இவர்கள் தொழில்நுட்பத் தேசியவாதத்திலேயே தங்கள் இறைமையின் இருப்பை தீர்மானிக்க வேண்டியவர்களாவார்கள். இதனால்தான் எல் நினோ தாக்கத்தால் தடுமாறுகிற உலகம் காலநிலைச்சீர்கேட்டை எதிர்கொள்வதற்கு ஏற்ப ஒவ்வொருநாட்டிலும் இடர்முகாமைத்துவத்தை திட்ட மிடத் தொடங்கியுள்ளது போல இந்தத் தொழில்நுட்பத் தேசியவாதத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளவும் ஒவ்வொரு நாடும் மட்டுமல்ல ஒவ்வொரு மக்கள் இனமும்  குறிப்பாக ஈழத்தமிழர்கள் போன்ற சிறுதேச இனங்கள் தங்களுக்கான தொழில்நுட்பத் தேசிய வாதப் பேரவைகளை அமைத்து செயற்பட்டாலே மக்களின் இறைமை அழிக்கப்படாது பாதுகாக்கப்படலாம் என்பதே இலக்கின் கருத்து
ஆசிரியர்

Tamil News

உலகின் தந்திரோபாயப் போக்குகளை கவனத்திலெடுத்தல்: ஈழத்தமிழர் இறைமையை மீளுறுதிப்படுத்த அவசியம் | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 407

Ilakku Weekly ePaper 408 | இலக்கு-இதழ்-408 | சனி, 12 செப்டெம்பர், 2026