ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, புதிய முத்தரப்பு நிர்வாகக் கட்டமைப்புக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட அமைச்சரவை தீர்மானத்தின் பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தமே காணப்படுகிறது என தனியார்துறை சேவையாளர் மத்திய நிலையம் குற்றம் சாட்டியுள்ளது.
கொழும்பில் அமைந்துள்ள தனியார்துறை சேவையாளர் மத்திய நிலையத்தின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் தேவிந்த கோதாகொட மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வூதிய நிதியங்களான ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன மிகவும் முக்கியமானவை ஆகும்.
கடந்த ஜூன் மாதம் இந்த நிதியங்களை ஒன்றிணைத்து புதிய முத்தரப்பு நிர்வாக அமைப்பை உருவாக்க அமைச்சரவை தீர்மானித்தது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்ட நிலையில், தொழிலாளர் அமைச்சினால் தொழிற்சங்கங்களை அழைத்து விசேட கலந்துரையாடலும் நடத்தப்பட்டது.
தற்போது ஊழியர் சேமலாப நிதியத்தின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பு பொறுப்புகள் தொழிலாளர் திணைக்களத்திடமும், 5 டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இந்நிதியத்தின் நம்பிக்கைப் பொறுப்பு இலங்கை மத்திய வங்கியிடமும் உள்ளது. ஆனால், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களின்படி, உருவாக்கப்படவுள்ள அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய புதிய முத்தரப்பு சபை அமைக்கப்பட்ட பின்னர், மத்திய வங்கியும் தொழிலாளர் திணைக்களமும் இதன் பொறுப்புகளில் இருந்து முழுமையாக நீக்கப்படும்.
2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்க முன்வைத்த சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துக்குள் இலங்கை நுழைந்த பின்னர், 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் ஆட்சி முறைமை ஆய்வு அறிக்கையிலேயே இந்த நிர்வாக மாற்றத்துக்கான கோரிக்கை முதன்முதலில் விடுக்கப்பட்டது.
மத்திய வங்கி இந்நிதியத்தை நிர்வகிப்பதில் நலன்சார் முரண்பாடு காணப்படுவதாகக் கூறி, இந்நிதியை மத்திய வங்கியிடமிருந்து பிரித்து முதலாளிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கே சர்வதேச நாணய நிதியம் முயல்கின்றது.
கடந்த 2025 நவம்பர் 4ஆம் திகதி பாராளுமன்ற அரசாங்க நிதி பற்றிய குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த போதிலும், சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தினால் தொழிலாளர் அமைச்சின் செயலாளர் இந்த மாற்றத்துக்கு இணங்கியுள்ளார்.
தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் இந்த நடவடிக்கையைத் தடுப்பதற்கு ஊடகங்களும் பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.



