செம்மணி மனிதப் புதைகுழி குறித்து சுயாதீன விசாரணைகள் நடாத்தப்படுவதை உறுதிசெய்வதை இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இவ்விவகாரம் குறித்து அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் என அவுஸ்திரேலிய செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
தனது நாடாளுமன்ற உரையின்போது செனெட் சபை உறுப்பினர் டேவிட் ஷுபிரிட்ஜ் மேலும் கூறியதாவது:
தற்போது இலங்கையில் யாழ், செம்மணியில் தடயவியல் அகழ்வாய்வு ஒன்று இடம்பெற்றுவருகிறது. இந்த அகழ்வில் 544 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
சில மனித எலும்புக்கூடுகளின் அளவை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில், அவை குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இது புதியதொரு கதை அல்ல.
இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் அவுஸ்திரேலியா உறுதியளித்தது.
அதனை இப்போது நாம் நடைமுறைப்படுத்தவேண்டும். அதற்கமைய செம்மணி மனிதப்புதைகுழி தளத்தைப் பாதுகாத்தல், அங்கு கண்டறியப்பட்ட மனித எச்சங்களை முறையாகப் பாதுகாத்தல் மற்றும் இதுகுறித்த சுயாதீன விசாரணைகளையும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும் இலக்காகக்கொண்டு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றல் என்பவற்றுக்கான நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தினார்.



