சிங்கப்பூரில் அர்ஜுன மகேந்திரன் தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தகவல்

சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

சிங்கப்பூரில் வசிக்கும் அர்ஜுன மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.

எனினும், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான சட்ட வழிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார்.

சாத்தியமான அனைத்து சட்டபூர்வ வழிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளையில், மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையானது, சிங்கப்பூரின் ‘நாடுகடத்தல் சட்டத்தின்’ கீழ் தேவையான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு முன்னதாக நிராகரித்திருந்தது.

மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ஜுன மகேந்திரன் இலங்கையில் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 2019 ஜூன் மாதம் ‘மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தில்’ இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.