” மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை” ஸ்தாபிக்கப்படும் – பண்டாரவளையில் ஜனாதிபதி தெரிவிப்பு

மலையக மக்களின் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்திய அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பண்டாரவளையில் ‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் இன்றைய (28) நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பண்டாரவளை பூனாகலை கபரகலை பகுதி மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட “நவோதயா புரம்” வீட்டுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று மக்கள் பயன்பாட்டுக்கு கையளித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கையர்கள் தாயகத்துக்கு திரும்பலாம். இதுவரைக் காலமும் காணப்பட்ட தடைகள் நீக்கப்பட்டுள்ளன. அவர்களும் இலங்கையர்களே. அவர்களுக்கும் உரிமை உண்டு.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்புடன் மலையகத்தை பாதுகாக்கும் பொருட்டு ” மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபை” ஸ்தாபிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.