இளம் பயனர்களை அடிமையாக்கும் வகையில் ஃபேஸ்புக் மற்றும் இன் ஸ்டாகிராம் செயலிகளை மெட்டா நிறுவனம் வடிவமைத்ததாக நான்கு அமெரிக்க மாநிலங்கள் குற்றம் சாட்டிய தைத் தொடர்ந்து, அந்நிறுவனம் 1.4 டிரில்லியன் டொலர் வரை அபராதத்தை எதிர்கொள்ளக் கூடும் என நீதிமன்ற ஆவணங்களை மேற்கோள்காட்டி ஊடகங்கள் கடந்த வியாழக்கிழமை(9) செய்தி வெளியிட்டுள்ளன. விதிக்கப்படக்கூடிய இந்த அபராதத் தொகையானது, அந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பான சுமார் 1.5 டிரில்லியன் டொலருக்கு ஏறக்குறைய சமமாகும்.
குழந்தைகளையும் பதின்வயதினரையும் அடிமையாக்கி வைத்திருக்கும் அதே வேளையில், செயலிகளின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, தனது தளங்களை வேண்டுமென்றே வடிவமைத்ததாக கலிபோர்னியா, கொலராடோ, கென்டக்கி மற்றும் நியூ ஜெர்சி ஆகிய மாநிலங்கள் மெட்டா மீது குற்றம் சாட்டியுள்ளதாக, அந்நிறுவனம் திங்களன்று நீதிமன்றத் தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் நடந்த நீதிமன்ற விசாரணையில், பாதிக்கப்பட்ட இளம் பயனர்களின் எண்ணிக்கையை மதிப்பிட்டு, மாநில சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட அபராதங்களைப் பயன்படுத்தி, முன்மொழியப்பட்ட அபரா தங்களைக் கணக்கிட்டதாக அந்த நான்கு மாநிலங்களும் தெரிவித்தன. இழப்பீடுகளை எவ்வாறு கணக்கிட வேண் டும் என்பது குறித்த மாநிலங்களின் கோரிக்கைக்கு மெட்டா அளித்த சட்டப்பூர்வ பதிலில் இந்த 1.4 டிரில்லியன் டொலர் தொகை வெளியிடப்பட்டது.
இந்த மதிப்பீடு சட்டப்பூர்வமாக ஆதாரமற்றது எனக் கூறி மெட்டா அதை நிராகரித்துள்ளது. “நுகர்வோர் பாதுகாப்பு அமலாக்க வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவிலான ஒரு தண்டனைக்கு இணையானது எதுவும் இல்லை,” என்று அந்நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் எழுதியுள்ளதாக ராய்ட்டர்ஸ் மேற்கோள் காட்டியுள்ளது.



