நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதன்படி, நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார பதவியிலிருந்து நீக்கப்படாமல் இந்தச் சம்பவம் தொடர்பில் நியாயமான விசாரணையொன்றை முன்னெடுக்க முடியாது என்று நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வர தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைப்பதற்காக புதிய சிறைச்சாலைகளை அமைப்பதை விடுத்து, கைதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் மாற்றுச் சட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அத்துடன், வரலாற்றுச் சிறப்புமிக்க போகம்பறை சிறைச்சாலை வளாகத்தை மீண்டும் சிறைச்சாலையாக மாற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார விமர்சித்துள்ளார்.
இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்தை பொறுப்பேற்பதாக தாம் தெளிவாக கூறியுள்ளதாகவும். பொறுப்பேற்க முடியாத ஒருபோதும் குறிப்பிடவில்லை என்றும் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்க்கட்சியினர் கொண்டு வரும் நம்பிக்கையில்லா பிரேரணையை சிறந்த முறையில் அரசாங்கமாக எதிர்கொள்வோம் என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார்.
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் பூரண விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிறைக்கைதிகளின் மனித உரிமையை பாதுகாப்பதை போன்று பொலிஸ் உத்தியோகத்தர்களின் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்று நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.



