சிறைச்சாலைகளில் மோதல்கள் அல்லது கைதிகளுக்கிடையில் முரண்பாடுகள் குறித்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. ஆனால் இந்த சம்பவம் குறித்து பிரத்தியேகமாக புலனாய்வு தகவல் எதுவும் கிடைக்கவில்லை என பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (7) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
சிறைச்சாலையில் மோதல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துப் பொதுவாகக் கிடைக்கக்கூடிய புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில், கைதிகளுக்கு இடையே அமைதியின்மை ஏற்படாதவாறு முன்கூட்டியே அதிகாரிகள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டன.
திங்கட்கிழமை காலை நீதிமன்றக் கடமைகளுக்காகக் கைதிகளை ஆஜர்படுத்தவும், கைதிகளின் உறவினர்களுடனான சந்திப்பை ஏற்பாடு செய்யவும் அதிகாரிகள் வழமையான நடவடிக்கைகளைத் தொடங்க முற்பட்டபோதே கைதிகளுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்தது என சிறைச்சாலை ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.



