இலங்கையின் பொருளாதார வரலாற்றை தேயிலைத் தொழிலைத் தவிர்த்து எழுத முடியாது. உலகப் புகழ்பெற்ற “சிலோன் டி” இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் முக்கிய ஏற்றுமதி உற்பத்திகளில் ஒன்றாகும். ஆனால், இந்தத் தொழில்துறையின் பிரகாசமான வெளிப்புறத்தின் பின்னால் பல தலைமுறைகளாக உழைத்து வரும் தொழி லாளர்களின் வாழ்க்கை இன்னும் வறுமை, சமத்து வமின்மை, சமூகப் புறக்கணிப்பு மற்றும் உரிமை மறுப்புகளால் நிரம்பி யிருக்கிறது.
குறிப்பாக மலையகத் தமிழ் சமூகத்தின் வரலாறு இலங்கையின் தேயிலைத் தொழிலுடன் பிரிக்க முடியாத வகையில் இணைந்துள்ளது. பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின்போது இந்தியாவில் இருந்து அழைத்து வரப் பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் தொழிலாளர்களின் உழைப் பின் மீதே இலங்கையின் தோட்டப் பொருளாதாரம் கட்டி யெழுப்பப்பட்டது. அவர்கள் உருவாக்கிய செல்வத்தின் பயன்களை நாடு அனுபவித்தபோதும், அந்த சமூகத்தின் பெரும்பகுதி இன்னமும் அடிப்படை மனித உரிமைகள், சமமான ஊதியம் மற்றும் கண்ணியமான வாழ்க்கை ஆகியவற்றிற்காகப் போராடிக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்ட ஆய்வறிக்கை, குறிப்பாக தென் மாகாணத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலை யகத் தமிழ் தொழிலாளர்களின் நிலை குறித்து கடுமை யான கேள்விகளை எழுப்பியுள்ளது. அந்த அறிக்கை சுட்டிக் காட்டும் விடயங்கள் வெறும் தொழிலாளர் சுரண்டலை மட்டுமல்லாது இன அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அமைப்புசார் அநீதிகளைப் பற்றியும் பேசுகின்றன.
மலையகத் தமிழர்களின் வரலாற்றுப் பின்னணி
மலையகத் தமிழ் சமூகத்தின் வரலாறு இலங்கையின் காலனித்துவ பொருளாதார வரலாற்றுடன் நேரடியாகப் பிணைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் இலங்கையில் கோப்பி மற்றும் பின்னர் தேயிலைத் தோட்டங்களை விரிவுபடுத்தியபோது, உள்ளூர் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழைத்து வந்தனர்.
இந்தத் தொழிலாளர்கள் மிகக் கடினமான சூழல் களில் வாழவும் உழைக்கவும் கட்டாயப்படுத்தப்பட்டனர். குறைந்த ஊதியம், தரமற்ற குடியிருப்புகள், கல்வி மற்றும் சுகாதார வசதிகளின் பற்றாக்குறை ஆகியவை அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தன. சுதந்திரத்திற்குப் பிறகும் இந்த நிலைமைகள் முழுமையாக மாறவில்லை. பல தசாப்தங்களாக குடியுரிமை பிரச்சினைகள், அரசியல் பிரதிநிதித்துவக் குறைபாடுகள் மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலை ஆகியவற்றை எதிர்கொண்ட மலையகத் தமிழர்கள், இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தொழிலாளர் சமூகங்களில் ஒன்றாகவே தொடர்ந்தனர்.
பொதுவாக தேயிலைத் தோட்டங்கள் என்றால் மத்திய மாகாணம், நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பகுதிகள் நினைவுக்கு வரும். ஆனால் தென் மாகாணத்தின் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கணிசமான அளவில் தேயிலை உற்பத்தி நடைபெறுகிறது. இந்தப் பகுதிகளில் பெரிய நிறுவனங்களின் கீழ் இயங்கும் தோட்டங்களுடன் சேர்த்து, தனியார் மற்றும் சிறு அளவிலான தோட்டங்களும் அதிகமாக உள்ளன. இவை பல நேரங்களில் தேசிய அளவிலான கவனத்திற்கு வராமல் போகின்றன.
இதன் விளைவாக, தொழிலாளர் உரிமைகள் நடை முறைப்படுத்தப்படுகிறதா?, குறைந்தபட்ச ஊதியச் சட்டங்கள் பின்பற்றப்படுகிறதா?, தொழிலாளர்கள் பாதுகாப்பான சூழலில் வேலை செய்கிறார்களா? என்ற கேள்விகள் போது மான அளவில் கண்காணிக்கப்படுவதில்லை. சர்வதேச மன்னிப்புச் சபையின் அண்மைய ஆய்வில் தென் மாகாணத்தின் பல தனியார் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்படி, தொழிலாளர்கள் பலர் சட்டரீதி யான பாதுகாப்புகளுக்கு வெளியே உள்ள வேலை ஏற் பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. வேலை இலக்குகளை அடையத் தவறினால் சம்பளக் குறைப்பு செய்யப்பட்டதாக அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவிக் கின்றனர். தொழிலாளர்களின் சமூக மற்றும் பொருளா தார பலவீனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிக்கை கூறுகிறது. சில இடங்களில் தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு பொருளாதாரத்தின் சார்பில் வைத்திருக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்தக் தகவல்கள் இலங்கையின் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்புகள் குறித்து ஆழமான கேள்விகளை எழுப்புகின்றன. அறிக்கையைத் தொடர்ந்து பரவலாக விவாதிக்கப்பட்ட முக்கிய விடயங்களில் ஒன்று சம்பள வேறுபாடு. சில தொழிலாளர்கள் வழங்கிய சாட்சியங்களின் படி, மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 முதல் 1,100 ரூபாய் வரையிலான ஊதியம் மட்டுமே வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், சில சிங்கள தொழிலாளர்களுக்கு அதிக ஊதியமும் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து ள்ளன. குறிப்பாக 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்பட்டது. இதில் 1,550 ரூபா அடிப்படை வேதனமாகவும், 200 ரூபா அரசாங்கத்தின் நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாகவும் அறிவிக்கப்பட் டது.
இருப்பினும், இந்த 200 ரூபா அரசாங்க நிதியுதவி மற்றும் மொத்த வேதன உயர்வுத் திட்டம் என்பன பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள தோட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். தென் மாகாணத்தில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் சிறு தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இந்த உயர்வு சட்டப்பூர்வமாகப் பொருந்தாது என்பதால், அவர்கள் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட 1,350 ரூபா என்ற குறைந்தபட்ச வேதனத்திற்கே உரித்துடையவர்களாக உள்ளனர். சர்வதேச மன்னிப்புச் சபையின் அண்மைய ஆய்வின்படி, தென் மாகாணத் தனியார் தோட்டங்களில் ஒரே பணியைச் செய்யும் தொழிலாளர்களிடையே இன அடிப்படையில் வேதனப் பாரபட்சம் நிலவுகிறது.
அங்குள்ள மலையகத் தமிழ் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,100 ரூபா மட்டுமே வேதனமாக வழங்கப்படுகிறது. அதேதோட்டங்களில் பணிபுரியும் சிங்களத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 ரூபா வரை வேதனமும், மேலதிகமாகத் தேநீர் மற்றும் உணவு வசதிகளும் வழங்கப்படுகின்றன. சிங்களத் தொழிலாளர் களுக்குச் சொந்த வீடுகள் இருப்பதால், அவர்கள் வேலையை விட்டுச் சென்றுவிடுவார்கள் என்ற பயம் நிர்வாகத்திற்கு உள்ளது. ஆனால், தோட்ட இருப்பிடங்களிலேயே தங்கியிருக் கும் தமிழ் தொழிலாளர்கள் எங்கும் செல்ல முடியாது என்ற பலவீனத்தை கொண்டு மலையகத் தமிழ் தொழிலாளர்கள் இந்த சுரண்டலுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
ஒரே பணியைச் செய்யும் இரு தொழிலாளர்கள் இன அடிப்படையில் வேறுபட்ட முறையில் நடத்தப்படுகிறார்கள் என்ற உணர்வு உருவானால், அது சமூக ஒற்றுமைக்கும் தொழிலாளர் நீதிக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மலையகத் தமிழ் தொழிலாளர்களின் பலவீனமான நிலை வெறும் இன அடையாளத்தால் மட்டும் உருவாகவில்லை. அது பொருளாதார மற்றும் சமூக காரணிகளின் சேர்க்கையாகும். பல தொழிலாளர்கள் தோட்ட குடியிருப்புகளிலேயே வாழ் கின்றனர். அவர்களின் வேலை, வீடு, சில சமயங்களில் குடிநீர் மற்றும் பிற அடிப்படை வசதிகளும் கூட ஒரே அமைப் பின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.
இந்த நிலைமையில் வேலையைவிட்டு வெளி யேறுவது என்பது வருமானத்தை மட்டும் இழப்பதல் லாது வாழும் இடத்தையும் இழப்பதாக மாறுகிறது. இதனால் தொழிலாளர்கள் அநியாயமான நிபந்தனைகளையும் ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அதேநேரம், இலங்கை யில் குறைந்தபட்ச ஊதியம் தொடர்பான சட்டங்கள் இருந்தாலும், அவை நடைமுறையில் அனைவருக்கும் சமமாகப் பயன்படுகிறதா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
அரசாங்கம் அறிவிக்கும் ஊதிய உயர்வுகள் பெரும்பாலும் ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவன அமைப்புகளின் கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே பயனளிக்கின்றன. தனியார் மற்றும் சிறு தோட்டங்களில் பணிபுரிபவர் கள் பல நேரங்களில் இந்தப் பாதுகாப்புகளுக்கு வெளியே விடப்படுகின்றனர். இதனால் ஒரே தொழில்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கிடையே பெரும் வருமான இடைவெளி உருவாகிறது. இதேவேளை, மலையகத் தமிழ் சமூகத்தின் வரலாறு சமூகப் புறக்கணிப்பின் வரலாறாகவும் பார்க்கப்படுகிறது. கல்வி வாய்ப்புகள் குறைவு, நில உரிமை பிரச்சினைகள், சுகாதார சேவைகளுக்கான அணுகல் குறைபாடுகள் மற்றும் அரசியல் அதிகாரமின்மை ஆகியவை பல தலைமுறைகளாக இந்த சமூகத்தை பாதித்துள்ளன. தெற்கிலுள்ள தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் இதே பிரச்சினைகளின் நீட்சியை அனுபவிக்கின்றனர்.
தொழிற்சங்கங்களின் பங்கு
இலங்கையின் தொழிலாளர் இயக்க வரலாற்றில் தொழிற்சங்கங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஆனால் தனியார் மற்றும் சிறு தோட்டங்களில் தொழிற்சங்கங்களின் செல்வாக்கு பல நேரங்களில் குறைவாக இருக்கின்றன. தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பற்றி அறியாத நிலையும், உரிமைகள் குறித்து குரல் கொடுக்க அஞ்சும் சூழலும் காணப்படலாம்.
இதனை மாற்ற தொழிற்சங்கங்கள் மற்றும் குடிமக்கள் அமைப்புகள் இணைந்து செயல்பட வேண்டி யுள்ளது. குறிப்பாக தென் மாகாணத்தில் உள்ள தேயிலைத் தோட்ட தமிழ் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கங்கள் உரிய முறையில் இயங்குவதில்லை அல்லது அவற்றுக்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது. தெற்கிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் மலையகத் தமிழ் தொழிலாளர்களின் நிலைமை குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் இலங்கையின் தொழிலாளர் மற்றும் மனித உரிமை வரலாற்றில் முக்கிய கவனத்திற்கு உட்படுத்தப்பட வேண்டியவையாகும்.
ஒரே வேலைக்கு சமமான சம்பளம், இன அடிப் படையிலான பாகுபாடுகளற்ற வேலை சூழல், சட்டப் பாதுகாப்பு மற்றும் மனித கண்ணியம் ஆகியவை எந்த சமூகத்திற்கும் அடிப்படை உரிமைகளாகும். மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக நூற்றாண்டுக்கும் மேலாக அளித்த பங்களிப்பை கருத்திற் கொண்டால், அவர்களுக்கு சமமான உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை உறுதி செய்வது ஒரு நலத்திட்டக் கடமை மாத்திரமின்றி அது ஒரு வரலாற்று நீதி நடவடிக்கையாகவும் உள்ளது.
இந்தப் பிரச்சினையை தனிப்பட்ட தோட்டங்களின் சிக்கலாக மட்டுமே பார்க்க முடியாது. இது இலங்கையின் சமூக நீதி, தொழிலாளர் உரிமைகள் மற்றும் இன சமத்துவம் குறித்த பரந்த விவாதத்தின் ஒரு பகுதியாகும். அதனால், அரசாங்கம், தொழிலாளர் அமைப்புகள், மனித உரிமை நிறுவனங்கள், தோட்ட நிர்வாகங்கள் மற்றும் குடிமக்கள் சமூகம் ஆகிய அனைத்தும் இணைந்து செயற்பட்டால்தான் இந்த நிலைமையை மாற்ற முடியும்.



