இலங்கையில் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் கடந்த 69 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகளில் கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 275 ஆக அதிகரித்துள்ளது. அவற்றில் 272 மனித எலும்புக்கூடுகள் இதுவரை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சிப் பணிகள் இடம்பெற்ற 15ஆவது நாளான நேற்று (03) புதன்கிழமை குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
“இன்று ஐந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஆறு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதுவரை 275 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 272 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மூன்றாம் கட்டத்தில் இதுவரை 34 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இன்று இரண்டு எலும்புக் குவியல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று அகழ்ந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகளும் அடங்குகின்றன.”
மனிதப் புதைகுழியின் மேலதிக அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளமையை தொடர்ந்து, ஏழு மாதங்களின் பின்னர் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் யாழ்ப்பாணம் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பமாகின.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வுப் பணிகள் தொடர்ச்சியாக 12 நாட்கள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர், அகழ்வாய்வுப் பணியாளர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காக மே 9 சனிக்கிழமை அன்று பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போது 261 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மூன்று வார கால ஓய்வின் பின்னர், இதன் அகழ்வாய்வுப் பணிகள் மீண்டும் 2026 ஜூன் முதலாம் திகதி ஆரம்பமாகின.
ஜூன் முதலாம் திகதி மீண்டும் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, குறித்த மனிதப் புதைகுழியிலிருந்து ஒரு எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டது, ஜூன் 2 ஆம் திகதி மேலும் எட்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு எலும்புக்கூடு மற்றுமொரு எலும்புக்கூட்டின் மீது காணப்பட்டதாக அகழ்வாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் முதன் முதலாக 2025 மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமாகின.
மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளுக்கு மேலதிகமாக, கண்டெடுக்கப்பட்ட 100 இற்கும் மேற்பட்ட பிற பொருட்களில், குழந்தைகளின் பால் போத்தல்கள், பொம்மை உள்ளிட்ட விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களின் காலணிகள், பாடசாலைப் பைகள் மற்றும் சில நாணயங்களும் அடங்குகின்றன.



