இலங்கை அரசாங்கத்துக்கும் கொரிய குடியரசுக்கும் இடையிலான பொருளாதார மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதிய கொள்கை உரையாடல் கடந்த மாத இறுதியில் கொழும்பில் அமைந்துள்ள நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சில் நடைபெற்றது.
இந்த உரையாடல் இருதரப்பு மேம்பாட்டுப் பங்காண்மையை மீளாய்வு செய்வதற்கும், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்கும், அண்மைக்கால பொருளாதார மாற்றங்களுக்குச் சமாந்தரமாக உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்குமான வாய்ப்பாக அமைந்தது.
அதேபோன்று இங்கு சுமார் 267 மில்லியன் டொலர் பெறுமதியான 18 பொருளாதார மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதியக் கடன்களுக்கான மறுசீரமைப்பு ஒப்பந்தங்கள் உத்தியோகபூர்வமாகப் பரிமாற்றப்பட்டன.
இந்த நிர்வாக ரீதியான அடைவானது இலங்கையின் நிலைமாற்றமடைந்துவரும் பொருளாதார சூழல் மற்றும் கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு மத்தியில், பரஸ்பர உதவிகளைத் தக்கவைப்பதில் இருநாடுகளும் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டைக் காண்பிப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கைக்கான கொரிய சலுகைக்கடன்களுக்கான சட்ட மற்றும் நிதி அடிப்படையை வழங்கிவரும் 2018 ஆம் ஆண்டு எட்டப்பட்ட கட்டமைப்பு ரீதியான ஏற்பாட்டைத் தொடர்ந்து நீடிப்பது பற்றியும் இதன்போது ஆராயப்பட்டது.



