அல்லைப்பிட்டி சிறுவனின் கொலையுடன் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

அல்லைப்பிட்டியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் , பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்து , சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்துமாறு , ஊர்காவற்துறை நீதவான் மத்திய குற்ற புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர்களின் கட்டளையை மீறி வாகனத்தை செலுத்தினார் என்று காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் , 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.

இந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது

இதன்படி, கடந்த வழக்கு தவணையில் குறித்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்தனர்.

இதனையடுத்து, நீதிமன்று, விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், குற்றப்புலனாய்வு பிரிவினர் பல வழக்குகள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுப்பதனால், கடும் வேலை பளு காரணமாக வழக்கு விசாரணைகளை மத்திய குற்றப்புலனாய்வு பணியகத்திற்கு பரப்படுத்துவதாக கடிதம் ஊடாக மன்றுக்கு காவல்துறை மா அதிபர் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வு பணியகம் வழக்கினை பாரமெடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது, மத்திய குற்றப்புலனாய்வு பணியக அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகி, ஊர்காவற்துறை காவல்துறையின் குறிபேடுகள் , விசாரணை அறிக்கைகள், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் என்பவற்றை தாம் பாரம் எடுத்துள்ளதாக அறியப்படுத்தியுள்ளனர்.

நீதிச்சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய சம்பவத்தை அடுத்து மீட்கப்பட்ட துப்பாக்கிகள், யாழ்ப்பாண தலைமை காவல்நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேநேரம் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்திய மன்று, சந்தேகநபர்களை விரைவாக கைது செய்து மன்றில் முற்படுத்துமாறு உத்தரவிட்டது.

அதன்படி, வழக்கின் அடுத்த விசாரணை தவனையை எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.