ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பெயரில் பாரிய நிதி மோசடி: காவல்துறை எச்சரிக்கை!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் நிதிமோசடி குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மோசடியாளர்கள் வாட்ஸ்அப் ஊடாகத் தொடர்புகொண்டு, தாம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என அறிமுகப்படுத்துகின்றனர். பின்னர் மூன்று போலி இணையதளங்கள் வாயிலாக ‘SriLankan.apk’ எனும் கையடக்கத் தொலைபேசி செயலியை  பதிவிறக்கம் செய்யுமாறு தூண்டுகின்றனர்.

இந்தச் செயலியானது வங்கிக் கணக்குகளைத் திருடும் ஒரு அபாயகரமான ‘ட்ரோஜன்’  மென்பொருளாகும். இதனைத் தரவிறக்கம் செய்யும் போது, உங்களது தொலைபேசியை தூரத்திலிருந்தே இயக்கும் அனுமதியை  மோசடியாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர். இதன் மூலம் உங்களது தனிப்பட்ட தரவுகள் அவர்களுக்குத் தெரியவரும்.

OTP குறியீடுகள், வங்கித் கணக்கு விவரங்கள் மற்றும் கடவுச்சொற்களைத் திருடும் மோசடியாளர்கள், உங்களது வங்கிச் செயலிகளுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்து, பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றிக்கொள்கின்றனர்.

பின்வரும் இலக்கங்கள் ஊடாக இந்த மோசடிகள் முன்னெடுக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது:

உடனடி நிதி லாபங்களை எதிர்பார்த்து பொதுமக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்க வேண்டாம் எனவும், இத்தகைய சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது இணைப்புக்களை தவிர்க்குமாறும்  காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.