74ஆவது சுதந்திர தினம்-மக்கள் பார்வை

74ஆவது சுதந்திர தினம்-மக்கள் பார்வை

74ஆவது சுதந்திர தினம்-மக்கள் பார்வை: இலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் தொடர்பாக பொது மக்களதும், அரசியல் சார்ந்தோரினதும் கருத்துக்களை இலக்கு ஊடகம் கேட்டறிந்தது. அவர்கள் கூறிய கருத்துக்களை இங்கே பகிர்கின்றோம்.

  • துரைரத்தினம் அச்சவேலி:
    இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது என்பது உண்மைதான் ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதா என்பது கேள்விக்குறி தான். சுதந்திரம் கிடைத்த நாட்டில் எதற்காக போராட்டங்களும் அரசுக்கு எதிர்ப்புக்களும் வரவேண்டும். அப்படி என்றால் யாருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது என்று நீங்களே சிந்தித்து பாருங்கள்.
  • ராஜ் யாழ்ப்பாணம்:
    இலங்கை நாட்டின் சுதந்திர தினம் பெப்ரவரி 4 ஆம்திகதி என்பது மட்டும் தெரியும். ஆனால் என்னை பாதித்த விடயங்களில் ஒன்று தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு வந்த நிலையில், தற்போதைய ஆட்சியில் தமிழ் மொழி தேசிய கீதம் நிறுத்தப்பட்டுள்ளது. இது சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப் பட்டுள்ளது. இது தனிச்சிங்கள சட்டத்தை தான் உணர்த்துகிறது. இங்கு ஆயிரத்துக்கு மேற்பட்ட இனங்களா வாழ்கிறார்கள்? இருப்பதே இரு மொழிகள் தான் இதற்கு சுதந்திரம் ஒற்றுமை இல்லை என்றால் யாரின் சுதந்திரத்ததை கொண்டாடுகிறார்கள். நூட்டில் சிறுபான்மை இனத்தவர்கள் என கூறிவிட்டு அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அரசியல் தலைவர்கள் அறிந்து கொண்டும் அறியாததது போல் சுதந்திரதின நிகழ்வில் பங்குகொள்வார்கள் எமது அரசியல் தலைவர்கள் வெட்கம் கெட்டவர்கள். முதலில் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுத்துவிட்டு சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்
  • கோகிலா யாழ்ப்பாணம்
    சுதந்திரம் கிடைத்து 73 வருடங்கள் கடந்தும் இலங்கையில் உள்ள  சிறுபான்மை இனங்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்றே கூறலாம். நாட்டில் இருக்கின்ற அரசாங்கங்கள் அனைத்தும் சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தைப் பரப்பும் செயற்பாடுகளையே தொடர்ந்து செய்து வருகின்றனர். சிறுபான்மை இனத்தவரின் கோரிக்கைகள் என்ன என்பதை  புரிந்து கொள்ளும் நிலையிலேயே அவர்கள் இல்லை. சிறுபான்மை இனம் என்றால் அவர்கள் அடிமைகள் என்ற நினைப்பிலேயே இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு இருந்து வருகிறது. இந்த நிலையில் எவ்வாறு சிறுபான்மை இனத்துக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று கூறலாம். ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்தவர்கள் தமக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது என்று கூறலாம். அதை கொண்டாடலாம். அதை உணரலாம். சுதந்திரத்தை உணர்ந்தவர்கள் ஏனையவருக்கு சுதந்திரத்தை உணர வைக்க வேணடும். அதை இந்த பெரும்பான்மை இனத்தவர் செய்கின்றனரா. விசத்தையும் இனவாதத்தையும் தானே வளர்க்கிறார்கள். இந்த நிலையில் எவ்வாறு சிறுபான்மை இனத்துக்கு சுதந்திரம் கிடைக்கும்.
  • தயாளன் திருநெல்வேலி:
    எங்களுக்கு அப்பிடி ஒரு தினம் இருக்கு என்ற நினைப்பே இல்லை.  அதை ஒரு பொருட்டாக மதிப்பதிப்பதே இல்லை. அப்படி ஒரு தேவையும் இல்லை. அன்றைய தினம் நடக்கும் நிகழ்வுகளை கிரிக்கட் போட்டி போல தொலைக்காட்சிகளில் பார்ப்போம். பிரிட்டிஸ்காரர் சிங்களவரிடம் நாட்டை கொடுத்து விட்டு சென்றார்கள். இதில் எங்களுக்கு என்ன நன்மை உள்ளது.
  • ராகுலன் கொக்குவில்:
    பெப்ரவரி 4 ஆம் திகதி சிறுவர்கள் வீட்டில் நிற்பார்கள். வேலை ஆட்களும் விடுமுறையில் நிற்பார்கள் ஏன் என்று காரணம் கேட்டால் நாட்டின் சுதந்திர தினம் என்பார்கள். விடுமுறை என்பதால் அனைவரும் சந்தோசமாக இருப்போம். இது மட்டும் தான் எமக்கு தெரியும். இலங்கைக்கு இன்னொரு நாட்டவரிடம் இருந்து சுதந்திரம் கிடைத்தது என்பது வெறும் பேச்சு மட்டுமே. இங்கு வாழும் மக்களுக்கு சுதந்திரம் இல்லை. அடக்குமுறைதான் நாம் அனுபவிப்பது.
  • தேவராணி மீசாலை:
    ஒரே நாடு ஒரே சட்டம் என சொல்கிறார்கள். இலங்கையில் உள்ள அனைத்து இனத்தவரும் ஒன்று சோர்ந்து இருப்பது தான் ஒற்றுமை. பல மதத்திகர், இனத்தவர் வாழும் இந்த நாட்டின் உரிமைகள் சமமாக பகிரப்பட வேண்டும். ஆனால் இலங்கையில் சமமாக பகிரப்படுகிறதா என்றால் இல்லவே இல்லை. இப்படியான நிலையில் எவ்வாறு இனங்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படும். ஓற்றுமை இல்லாத நாட்டில் ஏன் சுதந்திரதினம் கொண்டாட வேண்டும். யாருக்காக கொண்டாட வேண்டும். வெறும் படத்துக்காக மட்டுமே உலக நாடுகளுக்கு காண்பிப்பதற்கு மட்டுமே இந்த சுதந்திர தினம்.
  • தேவதாசன் மன்னார்:
    இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு இது இருண்ட நாள். கறுப்பு நாளாகத்தான் அதை கடைப்பிடிக்க வேண்டும். சுதந்திரம் வேண்டும் என்ற இந்த நாளில் நாம் கோரிக்கை விடுகிறோம். நாட்டின் சுதந்திர தினத்தில் நாட்டு மக்களுக்கு சுதந்திரம் தாருங்கள் என்று கோரிக்கயை நாம் முன்வைக்கிறோம். எம்முடைய அடிப்படை தேவைகளையும் மனிதனுக்கு உள்ள அடிப்படை உரிமைகளையும் மதிக்காத இந்த நாட்டில் என்ன சுதந்திரம் உள்ளது. மக்களுக்கு உரிமைகளை கொடுக்காத நாட்டில் என்ன சுதந்திரம் உள்ளது. சுதநதிரம் என்றால்   அறியாத மடையர் கூட்டம்தான் சுதந்திரத்தை கொண்டாடுவார்கள் எம்மத்தியிலும் சில மடையர் கூட்டம் உள்ளார்கள். துமிழ்மக்களுக்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்று கடவுளுக்கு தான் தெரியும் இந்த நாள் வரை தமிழருக்கு இலங்கையில் சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை
  • கலையமுதன்:
    சுதந்திர தினம் எதுக்காக கொண்டாட வேணடும் ஏன் கொண்டாடுகிறார்கள் என்று எமக்கு தெரியவில்லை நாட்டில் நாள் ஒன்றுக்கு 10 க்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. நடந்தவண்ணம் இருக்கிறது. பிரச்சனைகள் தலைக்கு மேல் போய்க்கொண்டு இருக்கிறது. 70 வருடங்களுக்கு மேல் சுதந்திர தினம் என்று ஒன்றை கொண்டாடி வருகிறார்கள். யாருக்காக கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை. குறிப்பாக ஒரு இனம் இன்னொரு இனத்தால் நசுக்கப்பட்டுக்கொண்டு இருக்கும்போது அந்த இனத்தின் வளங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் போது அந்த பாதிக்கப்பட்ட இனம் எவ்வாறு சுதந்திர காற்றை சுவாசிக்க முடியும். அடிமை வாழ்க்கை வாழ்பவருக்கு எவ்வாறு சுதந்திரத்தை கொண்டாட முடியும். உரிமைகள் பறிக்கப்படும் பொழுது எவ்வாறு சுதந்திரத்தை பற்றி சிந்திக்க முடியும்.
  • கோபால கிருஸ்ணன் பருத்தித்துறை:
    சிறு பிள்ளையை கேட்டாலே சுதந்திரம் என்றால் என்ன என்று தெரியும் சுதந்திரத்துக்காக தான் எமது தமிழ் இனம் போராடியது இப்போதும் போராடிக் கொண்டு இருக்கிறது சுதந்திரத்துக்காக எத்தனை உயிர்களை இழந்துள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும். சுதந்திர காற்றை நாம் சவாசிக்கா விட்டாலும் எமது அடுத்த சந்ததியினர் சுவாசிக்க வேண்டும். ஆற்கு நாம் பாடுபட வேண்டும். அற்ப சொற்ப சலுகைகளுக்காக நாம் விலை போகாமல் எமக்கான சுதந்திரத்தை பெற நாம்  போராடியே ஆக வேண்டும். அதுவரை எமக்கு சுதந்திர தினம் என்பது இல்லை.
  • பா.அரியநேத்திரன், மு.பா.உ, மட்டக்களப்பு:

74ஆவது சுதந்திர தினம்-மக்கள் பார்வைஇலங்கையின் 74வது சுதந்திரதினம் எதிர்வரும் பெப்ரவரி 04ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற 73சுதந்திர தினங்களிலும் இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்கள் சுதந்திரம் அற்றவர்களாகவே இருந்து வருகின்றனர்.

இந்த 74வது சுதந்திர தினம் மேலும் ஒரு படிக்கு சென்று இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு உரிமை பிரச்சினையில்லை, அபிவிருத்தி பிரச்சினைதான் உள்ளது அது தொடர்பாகத்தான் பேசவேண்டும் என்கின்ற வகையில் இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் மக்கள் தமது சுதந்திரத்திற்காக, தமது விடுதலைக்காக அகிம்சை ரீதியாக, ஆயுத ரீதியாக போராட்டத்தினை நடாத்தி, சர்வதேச ரீதியில் வடகிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்க வேண்டும் என்று பல்வேறு தளத்தில் பல பணிகள் முன்னெடுக்கப்படும் இந்தநேரத்தில், தமிழர்களின் பிரச்சினை வெறும் சலுகை என்பது போல் அரசாங்கத்தினர் தெரிவித்து வருகின்றதானது, இந்த சுதந்திர தினத்திலும் இந்த நாட்டில் தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் மனநிலையினையே காணமுடிகின்றது.

ஒரு நாட்டில் வாழும் சகல சனக்கூட்டத்திற்கும் சகல சுதந்திரமும் இருக்கும் போதே அந்தநாடு சுதந்திரமடைந்த நாடாக கருதப்படும். இலங்கையினைப் பொறுத்த வரையில் அவ்வாறான நிலையில்லை. சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கியாளும் நிலையே காணப்படுகின்றது.

தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுகின்றார்கள், 1650நாட்களை தாண்டி காணாமல் போனவர்களின் போராட்டம் தொடர்கின்றது, தமிழ் ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக கருத்துகளை வெளியிடமுடியாத நிலையுள்ளனர். இவ்வாறான நிலையில் அரசாங்கம் 74வது சுதந்திரதினம் என்று கூறினாலும் கூட தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் சுதந்திரமற்ற நாடாகவேயிருக்கின்றது.

  • த.சுரேஸ், தேசிய அமைப்பாளர், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மட்டக்களப்பு:

74ஆவது சுதந்திர தினம்-மக்கள் பார்வைஇந்த நாட்டில் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை. 1948ஆம் ஆண்டு இலங்கை தீவில் சிங்கள மக்களுக்குத்தான் சுதந்திரம் வழங்கப்பட்டது. தமிழ் மக்களை பொறுத்த வரையில் அன்று தொடக்கம் இன்று வரையில் சுதந்திரத்திற்காக போராடி வருகின்றனர். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொடக்கம் தமிழர்களின் இறமையினையும் கைப்பற்றி சிங்களவர்கள் ஆட்சி நடாத்தி வருகின்றனர். தமிழர்களின் தேசியம் என்று அங்கீகரிக்கப் படுகின்றதோ அன்று இந்த நாட்டில் தமிழர்களுக்கான சுதந்திர தினமாக இருக்கும்.

  • எஸ்.சிவயோகநாதன், கிழக்கு மாகாண சிவில் சமூக இணைப்பு செயற்பாட்டாளர், மட்டக்களப்பு:

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களை தனது அடக்குமுறைக்குள்  இந்த அரசாங்கம் வைத்துள்ளது. தமிழர்களைப் பொறுத்தவரையில் பெப்ரவரி 04ஆம் திகதி என்பது துக்க தினமாகவே தமிழர்களினால் பார்க்கப்படுகின்றது. தமிழர்கள் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களுக்கும் அடக்குமுறைகளுக்குள்ளும் வைத்துக்கொண்டு அனுஸ்டிக்கும் சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

Tamil News