50 வைத்திய உத்தியோகத்தர்கள் வடக்கு வைத்தியசாலைகளுக்கு நியமனம்- வைத்தியகலாநிதி. ஆ. கேதீஸ்வரன் தகவல்

மத்திய சுகாதார அமைச்சினால் வடமாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு ஐம்பது (50) வைத்திய உத்தியோகத்தர்கள் புதிதாக 15.02.2021 முதல் நியமிக்கப்பட்டுள்ளனர் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி. ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

”இவ்வாறு நியமிக்கப்பட்டவர்களில், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பதின்மூன்று பேரும், கிளிநொச்சி  மாவட்டத்திற்கு ஒன்பது  பேரும், வவுனியா மாவட்டத்திற்கு பதினொரு பேரும், மன்னார் மாவட்டத்திற்கு ஒன்பது பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எட்டு  பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் 15.02.2021 அன்று தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டனர். இந்த நியமனத்தில் வடமாகாணத்தின் பின் தங்கியுள்ள பிரதேசங்களிலுள்ள சில வைத்தியசாலைகளுக்கும் வைத்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த அடிப்படையில், யாழ் மாவட்டத்தில் ஊர்காவற்றுறை, அனலைதீவு வைத்தியசாலைகளுக்கும், வவுனியா மாவட்டத்தில் செட்டிக்குளம், நெடுங்கேணி வைத்தியசாலைகளுக்கும், மன்னார் மாவட்டத்தில் தலைமன்னார், சிலாவத்துறை, வங்காலை வைத்தியசாலைகளுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, புதுக்குடியிருப்பு, அலம்பில், சம்பத்நுவர ஆகிய வைத்தியசாலைகளுக்கும் வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என்றார்.