வடக்கு மாகாணத்தில் தரம் 1இல் இணையும் மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சி

வடக்கு மாகாணத்தில் தரம் 1இல் இணையும் மாணவர்களின் எண்ணிக்கை 2020 ஐ  விடவும் 2021இல்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக் காட்டப்படுகின்றது.

தமிழ் மக்களின் பிறப்பு வீதம் தொடர்ந்தும் குறைவடைவதாக தெரிவிக்கப்பட்டு வரும்போது தரம் 1இல் இணையும் மாணவர்களின் எண்ணிக்கையும் இதனை உறுதி செய்கின்றது. இதீற்கமைய 2020ஆம் ஆண்டில் வடக்கின் 5 மாவட்டத்திலும் 16 ஆயிரத்து 820 மாணவர்கள் தரம் 1இல் இணைந்தபோதும் 2021இல் 15 ஆயி்த்து 703 மாணவர்களே தரம் 1இல்  இணைந்துள்ளனர்.

இவ்வாறு இணைந்த மாணவர்களில் உச்சபட்ச விழுக்காட்டை கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. இங்கே 2020ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 82 மாணவர்கள் தரம் 1இல் இணைந்தபோதும் 2021இல் ஆயிரத்து 591 மாணவர்கள் மட்டும் இணைந்ததன் மூலம் 511 மாணவர்கள் விழுக்காடாகவுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு 8 ஆயிரத்து 157 மாணவர்கள் இணைந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் 8 ஆயிரத்து 55 மாணவர்கள் மட்டுமே இணைந்துள்ளதன் மூலம் 102 மாணவர்கள் குறைவடைந்துள்ளனர். கிளிநொச்சி  மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு  ஆயிரத்து 841  மாணவர்கள் இணைந்தபோதும்  2021 ஆம் ஆண்டில்  ஆயிரத்து 656  மாணவர்கள் மட்டுமே இணைந்துள்ளனர். இதன்  மூலம் 185  மாணவர்கள் எண்ணிக்கை  குறைவடைந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு 3  ஆயிரத்து 686  மாணவர்கள் இணைந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 433 மாணவர்கள் மட்டுமே இணைந்துள்ளதன் மூலம் 253  மாணவர்கள் குறைவடைந்துள்ளனர்.
மன்னார்  மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 54 மாணவர்கள் இணைந்த நிலையில் 2021 ஆம் ஆண்டில்  ஆயிரத்து 968  மாணவர்கள் மட்டுமே இணைந்துள்ளதன் மூலம் 86 மாணவர்கள் குறைவடைந்துள்ளனர்.

இவ்வாறு வடக்கு மாகாணத்தின் பிறப்பு விதம் குறைவடைவதனை எடுத்துக் காட்டும் இந்த புள்ளிவிபரம் எதிர் காலத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.