2020ம் ஆண்டில் 42 ஊடகவியலாளர்கள் கொலை

கடந்த ஓர் ஆண்டில் 42 ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேசப் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், உலகம் முழுவதும் 235 பத்திரிகையாளர்கள் தங்கள் வேலை தொடர்பான வழக்குகளில் சிறையில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் அத்தனை பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகின்றனர் எனும் கணக்கை, 30 வருடங்களுக்கு முன் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு எடுக்கத் தொடங்கிய போது இருந்த அதே அளவு தான் இன்றும் ஊடகவியலாளர்கள் கொலை விகிதம் உள்ளது.

மிகச் சமீபத்தில்தான் பத்திரிகையாளர்கள் கொலை விகிதத்தில் ஒரு சிறிய சரிவு ஏற்பட்டிருக்கிறது.

“சமீபத்தில் பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்படுவதன் விகிதம் குறைந்திருக்கிறது என்பதால், அவர்கள், தங்கள் வேலையைச் செய்வதற்காகச் சந்திக்கும் அச்சுறுத்தல்களையும், அபாயத்தை நாம் மறுக்க முடியாது” என சர்வதேச பத்திரிக்கையாளர்கள் அமைப்பின் பொது செயலாளர் ஆண்டனி பெல்லஞ்சர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பத்திகையாளர்கள் அமைப்பு இந்தக் கணக்கெடுப்பைத் தொடங்கிய முப்பது வருடங்களில் இதுவரை 2,658 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த வருடத்தில் அதிகபட்சமாக மெக்சிகோவில் 13 ஊடகவியலாளர்கள், பாகிஸ்தானில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஆஃப்கானிஸ்தான், இந்தியா,இராக் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளில், ஒவ்வொரு நாட்டிலும் மூன்று ஊடகவியாலாளர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்.

“இவை வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல, ஊடகவியலார்கள் வாழ்விற்கென தங்களை அர்ப்பணித்துக் கொண்டு, அதற்காகவே தங்கள் உயிர்களையும் இழந்த நம் நண்பர்கள், சக தொழிலாளர்கள். அவர்களை நினைவில் வைப்பதை கடந்து, ஒவ்வொரு வழக்கையும் தொடர்ந்து நடத்துவோம், அரசிடமும், நீதித்துறையிடமும் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவோம்” என ஆண்டனி பெலாஞ்சர் வேதனையோடு தெரிவித்துள்ளார்.