அரச வேலைவாய்ப்பிற்காய் அரசியல் வாதிகளால் அலைக்கழிக்கப்படும் இளையோர்

அரச வேலைவாய்ப்பிற்காய் தமிழ் இளைஞர் , யுவதிகள் அரசியல்வாதிகளால் அலைக்கழிக்கப்படுவதாகவும் இந்த நிலையை மாற்றியமைக்க இளைஞர் யுவதிகளை தன்னோடு ஒன்றிணையுமாறும் குருசாமி சுரேந்திரன் அழைப்புவிடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற வேட்பாளருமான சுரேந்திரன் குருசுவாமி அவர்கள் இது தொடர்பாக இன்று விடுத்துள்ள ஊடகக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அரச வேலை என்பது அரச நிர்வாகத்தை முன்னெடுத்து செல்வதற்காக காலத்திற்கு காலம் ஏற்படும் வெற்றிடங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதற்கான தகுதியுடையவர்களை முறையான ஆட்சேர்ப்பு நடைமுறை ஒன்றின் மூலம் நியமிக்கும் செயற்பாடாகும். ஆனால் தற்போது அரசபணி அரசியல்வாதிகளின் பணிக்கானதாக மாறி தேர்தல்கால சலுகைகளாகவும் தேர்தலுக்கு பின்னரான கூலியாகவும் வளங்கப்பட்டுவருகின்றது .

அரச பணி ஒன்றிற்கான தகுதி கல்வித்தகுதி மட்டுமன்றி மாறி மாறி ஆட்சிக்குவரும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளுக்கு சேவகம் செய்யும் தகுதியும் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது . வடக்கு கிழக்கில் குறிப்பாக யாழ் குடாநாட்டில் பல இளைஞர் யுவதிகளின் இலட்சியமாகவும் கனவாகவும் இருந்துவருகின்ற அரசவேலைக்காக தங்களின் தகுதி சான்றிதழ் கோவைகளுடன் தகுதி தராதரம் பாராது ஆழும்தரப்பின் பிரதிநிதியாக இருப்பவர்களின் அலுவலகங்களை நோக்கி சென்று தமது அரசியல் சித்தாந்தங்களையும் கைவிட்டு சுய கௌரவத்தையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு மணிக்கணக்கில் காத்துக்கிடப்பதை அவதானிக்க முடிகிறது .

எப்பாடு பட்டாவது எந்த அரசியல் வாதியினதும் சிபாரிசினை பெற்று அரச உத்தியோகம் ஒன்றை பெற்றுவிடுவோம் என்ற குறுகிய மனப்பான்மைக்குள் நமது இளைஞர் யுவதிகள் வந்துள்ளமையினால் ஆளும்தரப்பினர் அதை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதுடன் அன்மைக்காலமாக புதிய நடைமுறை ஒன்றும் கையாளப்படுகின்றது. தேர்தல் அறிவிப்பதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் நியமனங்களை வழங்குவதும் அதை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்துவதும் தேர்தலில் ஆளும் தரப்பு தோல்வியடைந்தால் அந்த நியமனம்
இரத்தாவதும் என அந்த நடைமுறை தொடர்கிறது கடந்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆயிரக்கான படித்த இளைஞர்களுக்கு இறுதி நேரத்தில் நியமனங்களை வழங்கி பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அது இரத்து செய்யப்பட்டு அந்த இளைஞர் யுவதிகள் நடுவீதியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று தற்போது உள்ள அரசும் காலத்தை இழுத்தடித்துவிட்டு பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு ஒருசில நாட்களுக்கு முன்னர் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு, பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பென நேர்முகத்தேர்வுகளையும் நடாத்திவிட்டு பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்களைகளையும் அனுப்பி வைத்துள்ளது. அதை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும்போது நியமனம் வளங்கினால் அது இரத்து செய்யப்படும் என தெரிந்தும் நியமன கடிதங்களை பெற்றவர்களும் நேர்முகத் தேர்வுக்கு சென்றுவந்தவர்களும் தங்களது நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காகவும் வழங்பட்ட நியமனங்களை உறுதிப்படுத்தி கொள்வதற்காகவும் எப்படியாவது தமக்கு வாக்களிப்பார்கள் என்ற நோக்கத்துடனேயே இந்த நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன.

நமது இளைஞர் யுவதிகள் அரச வேலைவாய்ப்பை மட்டுமே நம்பி அதை பெறுவதே தமது வாழ்க்கையின் இலட்சியமாக கொண்டிருக்கும்வரை இவ்வாறான அரசியல் நாடகங்களும் அலைக்கழிப்புக்களும் தொடர்ந்துகொண்டே செல்லும். என்பதனால் நாம் சுய கௌரவத்தோடு எமது தாயகப்பகுதியை பொருளாதார வளமுள்ளதாக மாற்றுவதற்கு வேறு வழிமுறைகளையும் கையாள முயற்சிக்க வேண்டும். அரச வேலைகளை நாம் தேடிப்போகாமல் அவ் வேலைகள் எம்மைத் தேடி வருமளவிற்கு எமது கல்வித்தரத்தை அதிகரிப்பதோடு , சர்வதேச ரீதியில் அதிக வருமானத்தை ஈட்டக்கூடிய தொழில்நுட்ப கல்வியினை கற்று அதிக வருமானத்தை ஈட்ட முயற்சிக்க வேண்டும். உதாரணமாக கணிணி மென்பொருள் துறையில் பணியாற்றும் இளைஞர்கள் அரச தொழில் ஒரு வருடம் கிடைக்கும் ஊதியத்தை ஒரு மாதத்தில் பெற்றுவிடுகின்றனர்.

வருடாந்தம் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் பல்கலைக்கழகங்களிலிருந்தும் தொழில்நுட்ப கல்லூரிகளிலிருந்தும் வெளியேறுவதுடன் உயர்தரத்தில் நல்ல பெறுபேறுகளை பெற்றும் வருகின்றனர் அனைவரும் அரச வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்தால் காலம்பூராகவும் வேலை தேடுபவர்களாகவே காலத்தை கழிக்கவேண்டிய நிலையே ஏற்படும்.

எனவேதான் நாம் ஒரு தன்னிறைவான பொருளாதாரம் சார்ந்து சிந்தித்து பாரிய முதலீடுகளை வடக்கிற்கு கொண்டுவந்து அனைத்து இளைஞர் யுவதிகளுக்கும் உரிய நேரத்தில் நிறைவான ஊதியத்துடன் அவர்களின் தகுதிகளுக்கேற்ப வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்கக்கூடிய பாரிய செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி எமது பொருளாதாரத்தையும் வளப்படுத்தி சுய கௌரவத்தையும் பாதுகாக்கும் தூரநோக்கோடு எமது உரிமைசார் அரசியலையும் பொருளாதாரத்தையும் சமமாக பயணப்படுத்துவதற்காகவே எமது கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் தமிழர்களின் நம்பிக்கையை வென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாக என்னையும் களமிறக்கியுள்ளது.

எனது கடந்தகால அனுபவங்களையும் சர்வதேச முதலீட்டு நிறுவனங்களுடனும் , வெளிநாட்டு தூதரகங்களுடனும் உள்ள தனிப்பட உறவினையும் பயன்படுத்தி எமது இளையோருக்கான சரியான தளத்தை அமைக்கும் பணியை குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன். எனவே யாழ்ப்பாண இளைஞர் யுவதிகள் என்னோடு கைகோர்த்து பயணிப்பதன் மூலம் இதுவரை இல்லாத பாரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதனால் எதிர்வரும் 4ம் மாதம் 25 ம் திகதி தீர்க்கமான முடிவினை எடுப்பதன் மூலமே இவற்றை நாம் சாத்தியப்படுத்த முடியும். எனவும் குறிப்பிட்டுள்ளார்.