’20’ ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் பட்ஜெட் வாக்கெடுப்பில் நழுவுவர்?

20ஆவது திருத்தத்தை ஆதரித்த முஸ்லிம் எம்.பிக்கள் வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பின்போது அதனை எதிர்த்து வாக்களிப்பர் எனக் கூறப்படுகின்றது.

மொட்டு அரசின் முதலாவது பட்ஜெட் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. நவம்பர் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்று அன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அரசும், அதன் தோழமைக்கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் எதிர்த்து வாக்களித்தன. அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் நால்வர்,பட்ஜெட் தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்படுவதாலேயே அவ்வாறானதொரு முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் எடுத்திருந்தனர். எனினும், 20 ஐ ஆதரித்த ரிஷாத் கட்சி உறுப்பினர்கள் பட்ஜெட்டுக்கும் நேசக்கரம் நீட்டினர்.

ஆனால் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின் போது ரிஷாத் கட்சி உறுப்பினர்களும் பட்ஜெட்டை எதிர்க்கக்கூடும் என தெரியவருகின்றது. பட்ஜெட்டை நிறைவேற்றிக் கொள்வதற்கு சாதாரண பெரும்பான்மை போதுமாதனது. எனவே, எதிரணியின் ஆதரவு ஆளுங்கட்சிக்கு அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, வரவு – செலவுத் திட்டத்தில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பிரதமர் 10 ஆம் திகதி சபைக்கு அறிவிப்பார்.