19 ஆவது திருத்தத்துக்கு சஜித் அணி ஆதரவளிக்காது; நிபந்தனை விதிக்கின்றார் ஹர்ஷா டி சில்வா

“அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு ஆதரவு வழங்கமாட்டோம். தடைகளை நீக்கி, முன்நோக்கி பயணிப்பதற்கு தடங்களாக உள்ள விடயங்களை திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக நிறைய நன்மைகள் கிடைக்கப்பெற்றன. ஆனாலும், அதில் சிற்சில குறைப்பாடுகள் இருப்பதாக பரவலாக கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனவே, இவை தொடர்பில் கலந்துரையாடி சாதகமான முறையில் 19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமைப்பதற்கு நாம் தயார்.

ஆனால் அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் பிரதான நோக்கங்களை மாற்றியமைப்பதற்கு முயற்சித்தால் அதற்கு ஆதரவு வழங்கமாட்டோம். நிறைவேற்று, சட்டவாக்கத் துறைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்களில் மாற்றம், வெளிநாட்டுப் பிரஜையொருவருக்கு இந்நாட்டு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கல் போன்ற திருத்தங்கள் இடம்பெற்றால் அவற்றுடன் உடன்படிமுடியாது.

அதேபோல் ஜனாதிபதியின் பதவி காலம், நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் என்பன 5 வருடங்களாக இருக்கவேண்டும். ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே பதவி வகிக்கலாம் என்ற தற்போதைய நிலையும் மாறக்கூடாது. அரசியலமைப்பு பேரவை, சுயாதீன ஆணைக்குழு, தகவல் அறியும் உரிமை ஆகியன 19 இன் பிரகாரமே தொடரவேண்டும்.

எனவே, இவற்றை இல்லாதொழிப்பதற்கு இடமளிக்கமுடியாது. எதிர் மறையான திருத்தங்களுக்கு நாம் எதிர்ப்பு. ஆனால், நாட்டை முன்நோக்கு அழைத்துச்செல்வதற்கு நடைமுறை சிக்கலாக உள்ள காரணிகளை திருத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்” என்றார்.