ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்த மாகாண சபைகளுடன் ஒப்பந்தம்!

இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவை முறைமையின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ஆரம்ப சுகாதார பராமரிப்பு முறைமை மேம்படுத்தும் திட்டத்தினூடாக ஒன்பது மாகாண சபைகளுக்கும் 3,600 மில்லியன் ரூபாய் வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.

மத்திய, கிழக்கு, வடமத்திய, வடமேல், வடக்கு, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்கள் ஆகிய ஒன்பது மாகாண சபைகளுக்கும், தலா 400 மில்லியன் ரூபாய் வீதம் வருடந்தோறும் வழங்கப்படவுள்ளது.

இதன்மூலம் நாடளாவிய ரீதியிலுள்ள சுமார் 1,700 ஆரம்ப சுகாதார பராமரிப்பு அலகுகள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் பௌதீக வளங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் சார்பில் அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் சாலிந்த பண்டார மற்றும் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சரத்சந்திர குமாரவங்ச ஆகியோர் கையெழுத்திட்டனர். மாகாண சபைகள் சார்பில் பிரதம செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் கடந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த திட்டம், ஐந்து ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்டுள்ள மொத்த செலவு 50 பில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதிப் பங்களிப்பை உலக வங்கி மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.