சட்டவிரோத மீன்பிடியைக் கட்டுப்படுத்த செய்மதி தொழில்நுட்பம் வழங்க நோர்வே இணக்கம்!

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி படகுகளைக் கண்காணிப்பதற்கும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும் நவீன செய்மதி தொழில்நுட்ப உதவிகளை வழங்க நோர்வே அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நோர்வேக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகருக்கும், நோர்வேயின் வர்த்தக, கைத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது, உயர் தொழில்நுட்பம் கொண்ட செய்மதி தரவு அமைப்புகளை இலங்கைக்கு வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நவீன தொழில்நுட்பத்தை இலங்கையினால் இலவசமாகப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இந்தத் தொழில்நுட்பத்தை மிகவும் பயனுள்ள முறையில் கையாள்வதற்காக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சு மற்றும் திணைக்கள அதிகாரிகளுக்கு விசேட பயிற்சித் திட்டங்களை வழங்கவும் நோர்வே தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய தொழில்நுட்ப ஒத்துழைப்பின் ஊடாக, இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாக்கவும், சர்வதேச தரத்திலான கண்காணிப்பு முறையை அமுல்படுத்தவும் வழிவகை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.