மாகாண சபைகள் பலவந்தமாகவே உருவாக்கப்பட்டது; இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர

13ஆவது அரசமைப்பின் ஊடாக மாகாண சபை முறைமை பலவந்தமாக உருவாக்கப்பட்டது. மாகாண சபை தேர்தலைத் துரிதமாக நடத்த வேண்டும் என கடந்த அரசில் அதிகாரத்தில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் குரல் கொடுக்கவில்லை. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட மற்றும் பொதுச் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு அது அடுத்த வருடம் முதலாம் காலாண்டுக்குள் நடத்தப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது;

“இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தில் மாகாண சபை முறைமை பலவந்தமாக உருவாக்கிக் கொள்ளப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் உரிமை மாகாண சபை முறைமையின் ஊடாக வழங்கப்பட்டது. அதனை கடந்த அரசு பாதுகாக்கவில்லை.

மாகாண சபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் நிச்சயம் தோல்வியடைவோம் என்பதை நன்கு அறிந்து பிரதமர் தேர்தலை நடத்தினார். மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் வடக்குகிழக்கு மாகாண மக்கள் தங்களுக்கான அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொண்டார்கள். அது அவர்களின் ஜனநாயக அடிப்படை உரிமையாகும்.

தமிழ் மக்கள் தீர்மானித்த அரசியல் உரிமைகளை கடந்த அரசு பாதுகாக்கத் தவறியது. மாகாண சபைத் தேர்தல் ஏனைய மாகாணங்களை தவிர வடக்கு-கிழக்குமாகாணங்களுக்கு முக்கியமானதாக இருந்தது மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த கடந்த அரசில் அதிகாரத்தில் இருந்த தமிழ் அரசியல்வாதிகள் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. சுயநல அரசியல் தேவைகளுக்காக தமிழ் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தார்கள்.

13ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விடயங்கள் நாட்டுக்கு எதிராக உள்ளன. அவற்றை நிச்சயம் திருத்தம் செய்வோம். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் எந்த மாகாணங்களுக்கும் வழங்கமாட்டோம். அதற்கான சூழல் ஏதும் தோற்றம் பெறவில்லை.

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்தவேண்டிய கடமை அரசுக்கு உண்டு. தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட மற்றும் பொதுச் சிக்கல் நிலைமைகளுக்கு தீர்வு கண்டு அடுத்த வருடத்தின் முதல் காலாண்டில் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.