18 வயதைக் கடந்தவர்கள் பெற்றோர் அனுமதி இன்றி திருமணம் செய்துகொள்ளலாம்- உச்ச நீதிமன்றம்

18 வயது வந்தவர்கள் இரண்டு பேர் திருமணம் செய்துகொள்வதற்கு பெற்றோர், சமூகம் உள்ளிட்ட எவருடைய அனுமதியும் தேவையில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடகா மாநிலம் பெலாகவி மாவட்டத்திலுள்ள முர்காட் காவல்நிலையில்,   தமது மகளைக் காணவில்லை என்று பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக, காவல்துறை விசாரணை நடத்தியபோது,  குறித்த பெண் திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டதும் அவர் வாழுமிடமும் தெரிந்த பிறகும், காணாமல் போன வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி பெண்ணை முர்காட்காவல்நிலையத்துக்கு வந்து பதிலளிக்கக்கூறி   கட்டாயப்படுத்தியுள்ளார். அதனையடுத்து, பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கத் தொடரப்பட்டது.

அந்த வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ‘காவல்துறை விசாரணை அதிகாரி என்னை கர்நாடாக மாநிலத்துக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்.

இல்லையென்றால் என்னுடைய கணவர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த  உச்ச நீதிமன்றம், ‘18 வயதைக் கடந்தவர்கள், அவர்களுக்கு விருப்பமானவர்களைத் திருமணம் செய்துகொள்வதற்கு உரிமை உள்ளது. அந்த உரிமை பணம், சாதி, சமூகம் உள்ளிட்ட காரணங்களால்பாதிக்கப்படக்கூடாது. படித்த இளைஞர்கள் வெவ்வேறு சாதிகளில் தங்களுக்கு விருப்பமானவர்களைத் திருமணம் செய்துகொள்கின்றனர்.

இதுபோன்ற கலப்புத்திருமணங்கள்தான் சாதி, மத மோதல்களை குறைப்பதற்கான வழியாக உள்ளது. ஆனால், அந்த இளைஞர்கள மிரட்டலை எதிர்கொள்கின்றனர். அந்தஇளைஞர்களுக்கு உதவுவதற்கு நீதிமன்றம் உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.