முல்லைத்தீவு -கொக்குத்தொடுவாய் பகுதியில் 29.06,2023 அன்று விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற சீருடைகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான அகழ்வு பணிகள் கடந்த வியாழக்கிழமை (6) இடம்பெற்ற நிலையில் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன.
முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் அன்றைய தினம் ஆரம்பமான அகழ்வு பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில், மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு அது பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற அடிப்படையில் குறித்த அகழ்வு பணி தொடர்பில் நேற்று (13) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெறும் கலந்துரையாடலின் பின் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது .
இதற்க்கமைய முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் பற்றிய விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (13) முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி. கே .நிறஞ்சன்,
சர்வதேச நியமங்களை பின்பற்றியும் வைத்தியர்களுக்காக தயாரிக்கப்பட்ட கோவையின் அடிப்படையிலும் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அழைக்கப்பட்ட நிறுவன பிரதிநிதிகளும் வைத்தியர்களாக வைத்தியர் வாசுதேவ மற்றும் பிரணவன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தார்கள்.
அவர்கள் இந்தப் புதைவழி எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த நபர்களின் கலந்துரையாடலின் அடிப்படையில், சர்வதேச நியமங்களை பின்பற்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கருத்துரைக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே வைத்தியர்களுக்கு அவர்களுடைய தயாரிக்கப்பட்ட கோவை ஒன்று காணப்படுவதாக கூறி அதற்கு அமைவாக இந்த அகழ்வை மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டிருக்கிறது
அதே நேரம் எவ்வாறு இந்த மனித புதைகுழி அகழ்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என நீதிமன்றத்தால் பல கட்டளைகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள், அரசியல்வாதிகள் மற்றும் பல நிறுவனங்களைச் சார்ந்தோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந்த நிறுவனங்களின் அறிக்கைகளுக்காக தொல்பொருள் திணைக்களத்தின் அறிக்கைக்காகவும் இந்த வழக்கு அடுத்த வியாழக்கிழமை மீண்டும் அழைக்கப்பட இருக்கிறது என தெரிவித்தார்.