கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் கண்டெடுக்கப்படவில்லை என்று காவல்துறை ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் தண்ணீர் குழாய்களைப் பொருத்துவதற்காகக் கடந்த மாதம் 29 ஆம் திகதி நிலத்தைத் தோண்டியபோது மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் என்பன தென்பட்டதையடுத்து, அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டன.
இதனைத்தொடர்ந்து கடந்த 30 ஆம் திகதியன்று அவ்விடத்தைப் பார்வையிட்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிவான், அங்கு ஜுலை மாதம் (இம்மாதம்) 6 ஆம் திகதியன்று அகழ்வுப்பணிகளை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இருப்பினும் கடந்த 8 ஆம் திகதி கொக்குத்தொடுவாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது சில வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்) கண்டெடுக்கப்பட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தில் இயங்கிவரும் Factseeker இச்செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்துள்ளது.
அதற்கமை இதுபற்றி காவல்துறை ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் Factseeker வினவியபோது, அவர் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது வெடிகுண்டுகளோ, வெடிமருந்துகளோ அல்லது துப்பாக்கி ரவைகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தியுள்ளார்.
அதுமாத்திரமன்றி இந்த அகழ்வுப்பணிகள் கடந்த 6 ஆம் திகதி மாத்திரமே முன்னெடுக்கப்பட்டதாகவும், 8 ஆம் திகதி எந்தவொரு அகழ்வும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.