இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு தொடர்ந்து உதவுவோம்- சீனா

இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கு சீனா தனது இயலுமைக்குள் தொடர்ந்து  ஒத்துழைப்புகளை வழங்குவதில் உறுதியாக உள்ளது. அந்த வகையில் இலங்கையுடனான சீனாவின் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்புகள் எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வோங் வென்பின் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தங்களின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட ஒத்திசைவான பல திட்டங்கள் குறித்து கலந்துரையாடும் நோக்கில் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இவ்வாறானதொரு நிலையிலேயே சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வோங் வென்பின் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிகையில்,

இலங்கையில் முதலீட்டை அதிகரிக்கவும், ஒரு மண்டலம் ஒரு பாதை முன் முன்முயற்சி திட்டங்களை உருவாக்கவும் ஆர்வத்துடன் செயல்படுகிறோம்.  இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சீன நிறுவனங்களை ஊக்குவிக்குறோம். இலங்கையுடனான சீனாவின் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பு எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை என்று குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் , இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை மறுசீரமைப்பதில் ஒரு திருப்புமுனையாக சீன ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், கடன் மறுசீரமைப்பு செயல்பாட்டில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக பீஜிங் உறுதியளித்துள்ளது. இந்த விடயதானம் தொடர்பில் நேரடி பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கும் வகையிலேயே நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சீனா சென்றுள்ளார்.

இலங்கையை பொறுத்த வரையில் சீனா மிகப்பெரிய கடன் வழங்குனராக உள்ளது. இதனை தொடர்ந்து இந்தியா மற்றும் ஜப்பான்  ஆகிய நாடுகள் உள்ளன. சீன – ஆப்பிரிக்கா ஆய்வு முன்முயற்சி மையத்தின் தகவல்களின் பிரகாரம், 2020 ஆம் ஆண்டின் இறுதியில், சீனாவின் எக்சிம் வங்கிக்கு 2.83 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளது.

2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் மொத்தமாக சீனாவுக்கு 7.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலுத்த வேண்டியுள்ளதாக  சீன – ஆபிரிக்கா ஆய்வு முன்முயற்சி மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.  இந்நிலையில்  இலங்கையுடன் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைளில் ஈடுப்பட சீன அரசாங்கம் எக்சிம் வங்கிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பாக ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையேயான கலந்துரையாடல்களை சீனா அவதானித்து வருகிறது. இதனடிப்படையில், ஏனைய கடன் வழங்குனர்களுடன் இலங்கை மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் குறித்து பீஜிங் கூடுதல் கவனம் செலுத்தும்.

எவ்வாறாயினும் கடன் வழங்குனர்களுக்கு இலங்கை ஏற்கனவே வழங்கிய உத்தரவாதங்களுக்கு அமைவாக சீனா உள்ளிட்ட பிரதான கடன் வழங்கிய நாடுகளுடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களை முன்னெடுப்பதற்கான கலந்துரையாடல்களை  தற்போது முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.