பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடையில்லை-பிரித்தானிய காவல்துறை

பிரித்தானியாவில் தமிழீழ  தேசியக் கொடிக்கு எவ்வித தடைகளும் இல்லை. அதனை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தலாம் என பிரித்தானிய  காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவிற்கு  பயணம் மேற்கொண்டுள்ள  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரித்தானியாவின் IHG Continental Park Lane Hotel முன்பாக புலம்பெயர் தமிழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டத்தின் போதே இவ்வாறு அதிகாரியினால் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கள் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு முதலில் பிரித்தானியா சென்றுள்ளார். அதனைத்தொடர்ந்து எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பிரான்சில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதி உடன்படிக்கைக்கான மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

 இந்நிலையில் பிரித்தானியாவிற்கு முதலில் பயணம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்களால் நேற்று (19) இரு வேறு இடங்களில் மாபெரும் எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் அவர் தங்கியிருந்த விடுதிக்கு முன்னர் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்  புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு தமிழீழ தேசிய கொடிகளை கைகளில் ஏந்தியவாறு தமிழினப் படுகொலையாளி ரணிலே வெளியேறு என்ற கோசங்களை எழுப்பினர்.

இதன்போது தடைசெய்யப்பட்ட கொடிகளை ஏந்திப்போராடுகிறார்கள் என அங்கு நின்ற பிரித்தானிய காவல்துறை அதிகாரிகளுக்கு பொய்யான தகவல் வழங்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடிக்கு எவ்வித தடைகளும் இல்லை. அதனை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தலாம் என பிரித்தானிய உயர்மட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.