ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. அல்கொய்தா  இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன், அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் உட்பட பல்வேறு பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளார். இவர், கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.

இதையடுத்து, சவுதி அரேபியாவைச் சேர்ந்த பின்லேடனின் மூன்று மனைவிகளில் ஒருவரது மகன் ஹம்ஸா(29), தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என எச்சரித்திருந்தார். பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்கொய்தா  இயக்கத்தின் முடி இளவரசராகவும் பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017ம் ஆண்டு, அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. அதுமுதல் ஹம்ஸா பின்லேடனை அமெரிக்கா தேடி வரும் நிலையில், அவர் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பதுங்கி இருப்பதாகவும், ஈரானில் வீட்டுக் காவலில் இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் உலா வருகிறது.

இதற்கிடையே, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்ஸா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா அரசின் உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க உயரதிகாரிகள் மூன்று பேர் இத்தகவலை தெரிவித்ததாக என்.பி.சி தெரிவித்துள்ளது. அவர் எப்போது, எங்கு கொல்லப்பட்டார் என்ற விவரமும், இதில் அமெரிக்காவுக்கு தொடர்பு இருக்கிறதா என்ற தகவல்களை அவர்கள் தெரிவிக்கவில்லை. கடந்த 2 ஆண்டில் எடுக்கப்பட்ட கடும் நடவடிக்கைகளில் சிக்கி ஹம்ஸா பின்லேடன் கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2011ம் ஆண்டில் பின்லேடன் கொல்லப்பட்ட பின் மேற்கத்திய நாடுகளுக்கு ஹம்சா பெரும் அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் மதிப்பீட்டை என்.பி.சி செய்தி நிறுவனம், முதன்முதலில் தெரிவித்ததை அடுத்து, இது உண்மைதானா என்று கேட்டதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் இதுகுறித்து தாம் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என கூறியுள்ளார்.