வீதியின்மையால் புதியபேருந்து நிலையத்துக்கு போக மறுக்கும் பேருந்துகள்

மாங்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்துக்கு ஒழுங்கான வீதி அமைத்து வழங்கப்படாததன் காரணமாக மாங்குளம் பேருந்து நிலையம் கால்நடைகளின் உறைவிடமாக மாறியுள்ளது.

2019 ஆம் ஆண்டு வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் குறித்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு புதுக்குடியிருப்பு பிரதேச சபையிடம் கையளிக்கப்பட்டது.

ஏ-9 வீதியில் இருந்து குறித்த பேருந்து நிலையம் கடந்து புகையிரத நிலையத்திற்கு அருகில் துணுக்காய் வீதியினை சந்திக்கின்ற 400 மீற்றர் தூர வீதி இதுவரை அமைக்கப்படவில்லை.

தொடக்கத்தில் புகையிரத திணைக்களத்தினர் தங்களுடைய காணிக்குள் வீதி வருகின்றது எனத் தெரிவித்த நிலையில், வீதி வேலைகள் தொடங்கவில்லை. முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வீதி அமைப்பதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக வினவியிருந்தார்.

இப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து வீதி அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் மாங்குளம் பேருந்து நிலையத்திற்கான வீதி இதுவரை அமைக்கப்படவில்லை.

இதன் காரணமாக மாங்குளம் நகரத்தில் பேருந்துகள் தங்கி செல்கின்ற போதிலும் ஒரு பேருந்துகூட மாங்குளம்பேருந்துநிலையத்திற்கு செல்வதில்லை. வீதி அமைக்கப்பட்டால்தான் மாங்குளம் செல்கின்ற பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குச் செல்ல முடியும். தற்போது புதிய பேருந்து நிலையம் கால்நடைகளின் உறைவிடமாக காணப்படுகின்றது.