இந்தியாவில் அதிகரிக்கும் கோவிட் 19: தமிழகத்தில் இன்று முதல் புதிய  கட்டுப்பாடுகள் அமுல்

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்து அரசு இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும், நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 1.31 இலட்சம் பேருக்கும், தமிழகத்தில் 5,441 பேருக்கும் கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில்   கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 உயர்ந்துள்ளதோடு  உயிரிழந்தவர்களின்  எண்ணிக்கையும் 1,68,436 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில்  இதுவரை 9 இலட்சத்து 20 ஆயிரத்து 827 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 12 ஆயிரத்து 863 பேர்  உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதில், முழுமையான கட்டுப்பாடுகளாக…

*இன்று முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லறை காய்கனி அங்காடிகள்     செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

*மாவட்டங்களில் மொத்த காய்கனி வளாகங்களில் உள்ள சில்லறை விற்பனைக்   கடைகளுக்குத் தடை.

*முதல் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை.

*மத்திய அரசால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்கள் தவிர சர்வதேச விமானப்   போக்குவரத்துக்கு தடை தொடரும்

*நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு எந்தத் தளர்வும் இல்லை என்று   அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த கட்டுப்பாடுகளுடன் இயங்குவதற்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

அவை,

*கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளுடன் தொழிற்சாலைகள் இயங்கலாம்.

*அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணம் செய்ய அனுமதி. நின்றுகொண்டு பயணம் செய்யக் கூடாது.

*பலசரக்கு, காய்கறி கடைகள், வணிக வளாகங்கள், நகை மற்றும் ஜவுளிக் கடைகள் ஆகியவை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம். என்று அறிவிக்கப்பட்டுள்ளது.