வன்முறைகளில் இருந்து தப்பிக்க இந்தியாவில் அடைக்கலம் கோரும் மியான்மர் மக்கள்

மியான்மரில் இராணுவ வன்முறைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் அங்கிருந்து வெளியேறும் மக்கள்  இந்தியாவுக்குள் செல்வது  அதிகரித்துள்ளது.

மியான்மரில் இராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இராணுத்தின் சதிப் புரட்சிக்கு எதிராகப் போராடிய 600-க்கும் மேற்பட்டவா்கள் இதுவரை சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் 43 சிறுவர்களும் அடங்குவதாக மியான்மரின் மனித உரிமை குழுக்கள் தெரிவிக்கின்றன.

இதைத் தொடர்நந்து  அங்கிருந்து மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு புலம்பெயர ஆரம்பித்துள்ளனர்.

இராணுவ வன்முறைகளால் அங்கு மக்கள் வீடுகளில் தங்கவே அச்சமடைந்துள்ளதாக அண்மையில்  அங்கிருந்து இந்தியா வந்த மஹாய் என்ற பெண் தெரிவித்துள்ளார். பல இரவுகள் தாங்கள் காடுகளுக்குள் மறைந்து இருந்ததாகவும் அவா் கூறியுள்ளார்.

மியான்மர் – இந்திய எல்லையில் உள்ள மணிப்பூர் ஊடாக பெரும்பாலான மியான்மர் மக்கள் இந்தியாவுக்குள் தப்பியோடி வருகின்றனர். மியான்மரில் இருந்து வருபவர்களை திருப்பி அனுப்பிவைக்குமாறு சமீபத்தில் மணிப்பூா் மாநில அரசு எல்லையில் உள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. பின்னர் இந்த உத்தரவு மீளப்பெறப்பட்டது.

மியான்மரில் இருந்து வரும் காயமடைந்த அகதிகளுக்கு சிகிச்சையளிப்பது உட்பட அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகளையும் எடுத்துவருவதாக மணிப்பூா் மாநில அரசு தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக இந்தியா – மியான்மர் எல்லைப் பகுதிகளில் 16 கிலோ மீற்றர் தூரத்துக்குள் இரு நாடுகளைச் சோ்ந்த மக்களும் சுதந்திரமாகக் சென்றுவர அனுமதி உள்ளது. இரு நாட்டவர்களும் 16 கிலோ மீற்றர் தூரத்துக்குள் எல்லைப் பகுதிகளில் 14 நாட்கள் வரை அனுமதியின்றித் தங்க முடியும்.

எனினும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து எல்லை மூடப்பட்டு சுதந்திர நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு எல்லை மீண்டும் திறக்கப்படும் என்று இரு தரப்பு மக்களும் நம்பினர். ஆனால் பெப்ரவரி ஆட்சி கவிழ்ப்பு அவர்களின் நம்பிக்கையை சிதைத்ததுவிட்டது.

ஆனால் எல்லைகள் மூடப்பட்டுள்ளபோதும் அச்சம் காரணமாக மியான்மர் மக்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தஞ்சம் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.