விவசாயிகள் போராட்டம்: இரு சங்கங்கள் திடீர் விலகல்?  

டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் இருந்து  இரண்டு வேளாண் அமைப்புகள் விலகுவதாக அறிவித்துள்ளன.

இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் சங்கங்கள் இந்திய குடியரசு தினத்தன்று நடத்திய டிராக்டர் பேரணியை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் நடத்தத் திட்டமிட்ட டிராக்டர் பேரணி பொலிஸார் வைத்த தடுப்பரண்களை உடைத்துக் கொண்டு ஜனவரி 26 (செவ்வாய்க்கிழமை) காலை தலைநகர் டெல்லிக்குள் நுழைந்தன.

இதையடுத்து, போராட்டக்காரர்களை தடுப்பதற்காக பொலிஸார் பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் இடையே நடந்த கைகலப்பில் 86 அதிகாரிகள் காயமடைந்ததாக டெல்லி பொலிஸ் தெரிவித்துள்ளது.

அதே சமயம், போராட்டக்காரர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.   விவசாயிகள் மற்றும் காவல் துறையினர் பல நூறு பேர் காயமடைந்தனர்.

வேறு திசையில் செல்லும் இந்தப் போராட்டத்தில் மேற்கொண்டு தங்களால் ஈடுபட முடியாது என்று அகில இந்திய கிசான் சங்கர்ஷ் கோ-ஆர்டினேஷன் கமிட்டி எனும் அமைப்பு தெரிவித்துள்ளது.

“இந்த வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது, விவசாயிகள் உரிமைக்கான எங்கள் போராட்டம் தொடரும். ஆனால், இந்த வழியில் அல்ல,”  என்று அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

அதே போல் பாரதிய கிசான் சங்கத்தின் ஒரு பிரிவும் இந்த போராட்டத்தில் இருந்து தாங்கள் விலகுவதாக அறிவித்துள்ளது.