மேயராக வருவதற்கு உதவிய எம்.ஏ.சுமந்திரன்,மாவைக்கு நன்றி -வி.மணிவண்ணன்

யாழ். மாநகர சபையின் மேயராக வருவதற்கு உதவிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா உள்ளிட்ட பலருக்குத் தமது நன்றியை மேயர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சபை மண்டபத்தில் இடம்பெற்றபோதே அவர்  இவ்வாறு நன்றி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ். மாநகர சபையின் மேயராக நான் வருவதற்கு 6 கட்சியினர் உதவியுள்ளனர். அதாவது தேர்தலிலே சந்தர்ப்பம் வழங்கி சபையின் உறுப்பினராகுவதற்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சந்தர்ப்பம் வழங்கியது.

அதேபோன்று எனது உறுப்புரிமைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கிலே எனக்கு எதிராக வாதாடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அந்த வழக்கை மீளப்பெற்று நான் மேயராகுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கினார்.

இதேபோன்று மாநகர மேயர் தேர்விலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மீண்டும் ஆனோல்ட்டைப் போட்டியி ட வைத்து என்னை வெல்ல வைக்க இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ. சேனாதிராஜா உதவினார்.

பழைய மேயரின் வரவு – செலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது வாக்களிக்கச் சபைக்கு வராது அந்த பட்ஜட் தோல்வியடைய ஐக்கிய தேசியக் கட்சியினர் உதவினர். அதன்பின்னர் மேயர் தேர்வின்போது எனக்கு ஈ.பி.டி.பி. மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். ஆகவே, இந்த 6 கட்சியினருக்கும் எனது நன்றி” – என்றார்.