விழுங்கப்படுகிறது  தாயகப் பகுதிகள்;வேடிக்கை பார்க்கிறோம் நாம்- கிருஸ்ணா

தமிழ் தேசியம், தமிழர்களின் உரிமை,வடகிழக்கு தமிழர்களின் தாயகம் போன்றவற்றினை முன்னிறுத்தி பல்வேறு போராட்டங்களை தமிழர் தேசம் முன்னெடுத்தது . இத்தகைய போராட்டங்கள் பல்வேறு இன்னல்களை, இழப்புக்களை தந்தபோதும் இனத்தின் உரிமைகள் என்ற சமரசத்திற்கு அப்பாற்பட்ட கோட்பாட்டிலிருந்து விலகமேலே அது சென்றுகொண்டிருந்தது

ஆனால் ஆயுதப் போராட்டத்திற்கு பின்னான காலத்தில்  இந்த கோட்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் விலகல்கள் இன்று தமிழர் சமூகத்தின் இருப்பினை கேள்விக்குறியாக்கி நிற்பதுபோல் தோன்றுகிறது.

போர் நடைபெற்ற காலத்தில் தம்மால் செய்யமுடியாதிருந்த பலவிடையங்களை இன்று சிறிலங்கா அரசு எந்த எதிர்ப்புகளுமின்றி செய்துவருகிறது.குறிப்பாக வடகிழக்கினை சிங்கள மயப்படுத்தும் நடவடிக்கைகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பாரம்பரியத்தினையும் பண்பாட்டினையும் நிலவுரிமையினையும் சிதைக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளை  சிங்கள பேரினவாதம்  மேற்கொண்டு வருகிறது.

கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி ,பட்டிப்பளை, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளில் திட்டமிட்ட குடியேற்றங்களை முன்னெடுத்த சிங்கள பேரினவாதம் தற்போது அதனை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஏக்கர்கொண்ட காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்கான பணிகள் முன்னெடுக்கப் பட்டுவருகின்றன.

மாவட்டத்தின் வடமேற்காக ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கிய எல்லைப்பகுதியாக காணப்படுபவை மயிலத்தமடு,மாதவனை பகுதிகளாகும்.இப்பகுதிகளின் எல்லைப்பகுதிகளாக பொலநறுவை,அம்பாறை மாவட்டங்கள் உள்ளன.

இப்பகுதிகள் இயற்கைவளம் நிறைந்த பகுதியாக காணப்படுவதன் காரணமாக இப்பகுதிகளில் காலம்காலமாக தமிழர்கள் கால்நடை வளர்ப்புக்காக பயன்படுத்திவருகின்றனர்.1974ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்பாக இருந்தே இப்பகுதிகளில் கால்நடை வளர்ப்புக்காக தமிழர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

பெரியமாதவனை,சின்னமாதவனை,மயிலத்தமடு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 6000ஆயிரம் ஏக்கர் காணிகளில் இவ்வாறு கால்நடை வளர்ப்பு முன்னெடுக்கப் படுகின்றது . யுத்தம் தீவிரமடைந்த காலங்களில் அப்பகுதிக்கு கால்நடை வளர்ப்புக்கு செல்லாதபோதிலும் அப்பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே விடுதலைப் புலிகளால் பேணப்பட்டுவந்தது.பின்னர் 2009ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிகளில் தமிழர்கள் கால்நடை வளர்ப்பினை மேற்கொண்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று,கிரான் பிரதேச செயலகப்பிரிவுகளை சேர்ந்த சுமார் 600 கால்நடை வளர்ப்பாளர்கள் சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை இங்கு வளர்க்கின்றனர்.இங்கு பெறப்படும் பால் முழுவதும் தென் பகுதிக்கே அனுப்பப்படுகின்றது.

பாதைகள் சீரின்மையால் போக்குவரத்து மிக சிரமமான விடயமாகிறது.மோட்டார் சைக்கிளில் வரும்போதே பெரும் கஸ்டத்தின் மத்தியில் நீண்டதூரம் பயணிக்க வேண்டிய நிலையுள்ளது.

இவ்வாறான நிலையில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிகளை கபளீகரம் செய்து அங்குள்ள கால்நடை வளர்ப்பாளர்களை அகற்றுவதற்கு பெரும்பான்மையினத்தவர்களினால் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரின் ஆதரவுடன் இப்பகுதிகளில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டு அவர்களுக்கான தற்காலிக கொட்டில்களும் 2010ஆம் ஆண்டு அமைக்கப்பட்டன.cH4jPdO விழுங்கப்படுகிறது  தாயகப் பகுதிகள்;வேடிக்கை பார்க்கிறோம் நாம்- கிருஸ்ணா

அது தொடர்பில் அன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையான் மற்றும் மீள்குடியேற்ற பிரதியமைச்சராக இருந்த கருணா ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டபோதிலும் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென குறித்த பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கு முன்னர் தமது கால்நடைகளை களவாடுவதும் சுடுவதுமாக இருந்ததாகவும் குடியேறிய பின்பும் இந்த நிலைமை தொடர்வதாகவும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

2013ஆம் ஆண்டு  200 குடும்பங்கள் அப்பகுதிக்கு வந்து குடியேறியதுடன் காடுகளை வெட்டி சேனைபயிர்ச்செய்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.இது தொடர்பில் கால்நடை வளர்ப்பாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும் எதுவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

தினமும் பல்வேறு பிரச்சினைகளை இப்பகுதிகளில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுவந்த தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொண்டுவந்தனர். குறித்த பகுதி மகாவலிக்கும் வன இலகாவுக்கும் உரிய பகுதி என்ற காரணத்தினால் அதிகாரிகளின் கெடுபிடிகளுக்கும் இப்பகுதியின் கால்நடை வளர்ப்பாளர்கள் முகம் கொடுக்கின்றனர்.

கால்நடை வளர்ப்பாளர்கள் தமது மாடுகளை வளர்ப்பதற்காக பட்டி அமைப்பதற்கு கம்புகள் வெட்டும்போது அவர்களை கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தும் வனஇலகாவினர் இப்பகுதிக்கு வந்து காடுகளைவெட்டி குடியேறமுனைவோர் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.

2016ஆம் ஆண்டு மேலும் ஒரு தொகுதி குடியேற்றங்களை இப்பகுதிகளில் செய்யமுற்பட்டபோது அன்றை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்.இப்பகுதி மகாவலி வலயத்திற்கான பகுதியாக உள்ள காரணத்தினால் அன்றைய ஜனாதிபதி மகாவலி அபிவிருத்திக்கான அமைச்சராகவும் இருந்த காரணத்தினால் அது தொடர்பில் உடனடியாக நடவடிக்கையெடுக்கப்பட்டது.

இதனடிப்படையில் பெரியமாதவனை,சின்னமாதவனை,மயிலத்தமடு ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்த மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் அன்றைய கிழக்கு மாகாண விவசாய அமைச்சரான கி.துரைராஜசிங்கம் போன்றவர்கள் அப்பகுதிகளை பார்வையிட்டதுடன் அங்கிருந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்த சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 600க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து அகற்றினர்.IMG 0194 விழுங்கப்படுகிறது  தாயகப் பகுதிகள்;வேடிக்கை பார்க்கிறோம் நாம்- கிருஸ்ணா

அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக தமது கால்நடை வளர்ப்புகளை மேற்கொண்டுவந்த நிலையில் மாடுகள் சுடப்படுவது,திருடப்படுவது என தொடர்ந்தவண்ணம் இருந்ததுடன் கால்நடை வளர்ப்பாளர்கள் மீதான அச்சுறுத்தல்களும் இருந்தன.எனினும் சட்ட விரோதமான முறையில் மேற்கொள்ளபட்ட காணி அபகரிப்புகள் தடுக்கப்பட்டன.

இந்த நிலையில் இன்னுமொன்றை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையிருக்கின்றது. குறிப்பாக கால்நடை வளர்ப்பாளர்கள் தமது கிராமங்களில் இருந்து இங்குவருவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.வீதிகள் பயணிக்கமுடியாத நிலையில் கரடுமுரடுமாக இருப்பதனால் வந்துசெல்வதில் பெரும் கஸ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

ஆனால் பொலநறுவையில் இருந்தும் அம்பாறையில் இருந்தும் இங்கு சிங்களவர்கள் வந்துசெல்வதற்காக வீதிகள் செப்பனிடப்பட்டு போக்குவரத்து செய்வதற்கு இலகுவாக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இப்பகுதிகளில் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றது என்பது புலனாகின்றது.

அதுமட்டுமன்றி மட்டக்களப்பு மாவட்டத்திற்குள் குடியேற்றங்களை மேற்கொள்வதில் அம்பாறை,பொலநறுவை மாவட்டங்களில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளும் சிங்கள அதிகாரிகளும் முனைப்புடன் செயற்பட்டுவருவதையும் காணமுடிகிறது.

இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதும் அதனை தடுத்து நிறுத்துவமாக இருந்துவருவதாகவும் கால்நடைக்கு என ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வேறு மாவட்டங்களில் இருந்து குடியேறுவோர் தொடர்பில் நடவடிக்கையெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு மாவட்டத்தினை திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் தமது பெரும்பான்மையினை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தினை சிங்கள பேரினவாதம் நன்கு திட்டமிட்ட வகையில் முன்னெடுத்துவருகின்றது.

எதிர்காலத்தில் இப்பகுதிகளை தமிழர்கள் பாதுகாக்கவேண்டுமானால் இப்பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் அல்லது தமிழர்கள் நிரந்தரமாக குடியேறவேண்டியது காலத்தின் கட்டாயமாக நிற்கின்றது. இதற்கான நடவடிக்கைகளும் விரைவாக எடுக்கப்படவேண்டியது அவசியம்.1 1 விழுங்கப்படுகிறது  தாயகப் பகுதிகள்;வேடிக்கை பார்க்கிறோம் நாம்- கிருஸ்ணா

தமிழர்கள் தங்களின் ஆயுதப்போராட்ம் மூலம் பாதுகாத்த நிலங்களை இன்று இலகுவில் கபளீகரம் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையில் அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் அரசியல்வாதிகள் வக்கற்ற நிலையில் நிற்பதை  காணமுடிகின்றது.

எவ்வாறாயினும் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்களைப் பாதுகாப்பதன் மூலமே கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியும்.அவ்வாறு இல்லாவிட்டால் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்ற பேச்சு இன்னும் ஐந்து வருடங்களில் இல்லாமல்போகும் அபாயம் உள்ளது.இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம் என்பன இணைந்து இப்பகுதியின் தமிழர்கள் இருப்பு அதனை பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்தான கள ஆய்வுகளை முன்னெடுத்துவருகின்றது.எதிர்காலத்தில் அனைவரும் இது தொடர்பில் ஒன்றித்து பயணிக்கவேண்டும் .