வட இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளால் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்கள்

இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெறுவது போலவே வடக்கிலும் கொரோனா வைரஸைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கூலித் தொழிலாளர்கள், தனியார் வியாபார நிலையங்களில் வேலை செய்தவர்கள், மேசன், மற்றும் தச்சுத் தொழிலாளிகள், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களும், தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள், சலூன் தொழிலாளர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பத்திரிகைதுறை தொழிலாளர்கள் போன்ற பல்வேறுபட்ட தொழிலாளர்களுடன் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களும் வருமானத்தை இழந்து உணவு உட்பட அடிப்படைத் தேவைகளுக்காகத் திண்டாடுகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் 30 வருடகாலமாக முன்னெடுத்த இனவாத யுத்தத்தின் அழிவில் இருந்து தலைதூக்க முயன்ற இந்த மக்கள், கடந்த மாதம் முழுதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் முழு அடைப்பினால் அதல பாதாளத்துக்கே தள்ளப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கொடுப்பதாக அறிவித்துள்ள அற்ப தொகையான 5,000 ரூபா, சமுர்த்தி உதவிபெறுபவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதோடு அநேகமானவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏனையோர் அதைப் பெறுவதற்கு நோய் தொற்றும் அபாயத்துடன் வரிசையில் நிற்க வேண்டியிருப்பதோடு அதற்கு தகுதி பெற பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஊடரங்கு சட்டத்தின் மத்தியில் மக்கள் அலுவலர்களைத் தேடிப் பிடிக்கவே பெரும்பாடு படுகின்றனர்.

தற்போது காலை முதல் மாலை வரை ஊரடங்கு அகற்றப்பட்டிருந்தாலும், மக்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்ய வருமானமோ தொழிலோ கிடையாது. கடந்த மாதம் முழுதும் வருமானம் இன்றி இருந்த குடும்பங்கள் எப்படியாவது சமாளித்துக்கொள்ளத் தள்ளப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் சில செல்வந்தர்கள் மற்றும் பொது அமைப்புக்களும் வழங்கிய உணவுப் பொருட்களைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டுகின்றன. பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இந்த நிவாரணப் பொதி வழங்கும் நடவடிக்கையை தேர்தல் பிரச்சாரமாக்கிக்கொள்ள முயல்வதாக மக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.

கொவிட்-19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்கள் கடந்த பின்னும் வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துள்ள இலங்கை இராணுவம், தனது இருப்பையும் அதிகாரத்தையும் மேலும் பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது. அத்தியாவசியத் தேவைக்காக வெளியில் செல்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு படையினரால் மிக கொடூராமக தாக்கப்பட்டுள்ளனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தொற்று நோயாளர் என்ற சந்தேகத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும் வாழ்வாதாரங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கவில்லை. அவர்கள் வெளியில் சென்று வாழ்வாதாரம் தேட முடியாமல் அடைபட்டுக் கிடக்கின்றனர். தனிமைப்படுத்தலில் இருந்து வீடுகளுக்கு திரும்பி இருப்பவர்களையும் பொலிசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு அத்தியாவசிய பண்டங்களை வழங்கும் திட்டங்கள் எதுவும் கிடையாது.

kilinoch வட இலங்கையில் கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளால் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ள ஏழைத் தொழிலாளர்கள்ஊரடங்குக்குள் சிக்கிக்கொண்ட குடும்பங்களுக்குள் வறுமை மற்றும் பட்டினி காரணமாகவும் வேறு உளவியல் தாக்கங்கள் காரணமாகவும் குடும்பத் தகராரறுகள் முற்றி தற்கொலைகள் அதிகரித்துள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிழக்கில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இளம் குடும்பஸ்தர்கள் மற்றும் இளைஞர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

விவசாயிகள் தெற்கில் உள்ள தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் போனதால் பெரும் நட்டத்தினை எதிர்கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான கிலோ உற்பத்திகள் அழுகிப் போவதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உள்ளூர் சந்தைகளில் மிகவும் குறைந்த விலையிலேயே காய்கறிகள் வியாபாரிகளால் கொள்வனவு செய்யப்படுகின்றன.

மீன் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளதால் மீனவர்களின் வருவாய் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடலுக்கு செல்லும் தூரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பல ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்கள் முடங்கிப் போயுள்ளார்கள். சிறிய தொழில்களின் மூலம் பிடிக்கப்படும் மீன்கள் உள்ளூர் சந்தைகளில் குறைந்த விலைகளிலேயே விற்கப்படுகின்றன.

மீனவர்கள், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளும் தங்களது வாழ்க்கை நிலைமை சீரழிந்துபோய் இருப்பதைப் பற்றி உலகசோசலிசவலைத்தளத்துடன்உரையாடினர்.

சிறுகடலில் இறால் பிடிக்கும் காரைநகரைச் சேர்ந்த புஸ்பமலர், 40, என்ற பெண், சில சமயம் கிடைக்கும் இறால், நண்டு போன்றவற்றை வீடு வீடாக கொண்டு சென்று விற்பனை செய்து பிழைக்கின்றார். அவரை நம்பி குடும்பத்தில் 7 பேர் உள்ளனர். ஒரு மகள் தீக்காயங்களுக்கு உள்ளாகி அரசாங்க ஆஸ்பத்திரியில் பொருத்தமான சிகிச்சை கிடைக்காததால், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறத் தள்ளப்ட்டார். அதனால் அவர் ஒரு லட்சம் ரூபா கடன்பட்டுள்ளார்.

“ஊரடங்குச் சட்டம் எமக்கு மோசமான பட்டினி வாழ்க்கையை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறிய அவர், “மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது, பிடித்த இறால், நண்டுகளை விற்பனைக்கு கொண்டு சென்றால் கடற்படையினர் தடியை எடுத்துக்கொண்டு என்னைத் துரத்தினார்கள், அகப்பட்டிருந்தால் என்னை அடித்திருப்பார்கள்,” என அவர் தெரிவித்தார். “மீன்பிடிக்க அனுமதித்துவிட்டு விற்பதற்கு அனுமதிக்காவிட்டால் என்ன செய்ய முடியும்? ஊரடங்கு சட்டத்துக்கு முன்னர் நான் 700 ரூபா உழைத்தேன். தற்போது ஒன்றும் இல்லை. அரிசி 150 ரூபாவுக்கும் தேங்காய் 100 ரூபாவுக்கும் விற்கிறார்கள். வழமையாக எங்களுக்கு 2 கிலோ அரிசி வேண்டும், எம்மால் ஒரு கிலோ கூட வாங்க முடியவில்லை. மதியம் சமைக்கும் சோற்றைத்தான் இரவும் மறுநாள் காலையிலும் சாப்பிடுகிறோம். அரசாங்கம் கொடுத்த 5,000 ரூபா அற்பத்தொகை எத்தனை நாளைக்கு போதுமானது? இப்போது எல்லோரும் பிச்சைக்காரர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அதனால் பிச்சை கூட எடுக்க முடியாது,” என அவர் மேலும் கூறினார்.

ஊரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு மேசன் தொழிலாளியான கிருஸ்ணச்சந்திரன், 32, தான் வேலைக்குப் போனால் தான் குடும்பம் வாழும் ஆனால் தற்போது எந்த தொழிலும் இல்லை, என்றார். “அரைகுறை சாப்பாடுதான் சாப்பிடுகிறோம். பிள்ளைகள் அடிக்கடி சாப்பாடு கேட்டு அழுகின்றார்கள். பக்கத்தில் ஒரு கடையில் கடன் வாங்குவோம். காசு கிடைத்தவுடன் திருப்பிக் கொடுப்போம். இப்போது அங்கு 30,000 ரூபா கடன் உள்ளது. வேலை இல்லாமல் போனதால் திருப்பி கொடுக்க முடியவில்லை. தொடர்ச்சியாக கடனும் வாங்க முடியவில்லை. முன்னர், நான் நாளாந்தம் ஆயிரம் ரூபாவைப் பெறுவேன். தற்போது ஒன்றுமே இல்லை.” என அவர் கூறினார்.

யுத்தகால அனுபவங்களை ஒப்பிட்டுப் பேசிய அவர், “நாங்கள் நீண்ட கால யுத்த சூழ்நிலையைக் கடந்து பல அழிவுகளைப் பார்த்துள்ளோம். அதேபோல் இதுவும் ஒரு அழிவாக இருக்குமோ என சந்தேகிக்கின்றோம்,” என்றார். “மகிந்த இராஜபக்ஷ அழிவுகரமான யுத்தத்தினை நடத்தினார். மைத்ரிபால சிறிசேன யுத்தத்துக்கு பட்ட கடனைக் கட்டுவதற்கு எம்மீது பொருளாதாரச் சுமையைத் திணித்தார். கோட்டாபாய இராஜபக்ஷ கொரோனாவைக் கொண்டு மக்களை ஒடுக்குமுறைக்குள் வைத்திருக்கின்றார். தமிழ் அரசியல் கட்சிகள் வாக்குகளை வாங்குவதற்கே எம்மிடம் வருகின்றன. இப்போது யாரையுமே காணவில்லை. முக கவசங்களை அடிக்கடி மாற்ற வேண்டும் என்று கூறுகின்றார்கள். யார் கொடுப்பார்? அல்லது எம்மிடம் பணம் இருக்கிறதா?,” என அவர் கேட்டார்.

அதே கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் லோகேஸ்வரன், 34, கள்ளு உற்பத்தி செய்யும் தொழிலாளி ஆவர். அவரது குடும்பத்தில் 6 பேர் உள்ளனர். கள்ளு இறக்குவதற்கு எமக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், குடிப்பவர்களுக்கு வருமானம் இருந்தால் தானே வருவார்கள், என்றார். “அப்படி காசு இருந்தாலும் நடமாடுவதற்கு ஊரடங்கு தடையாக உள்ளது. எங்களுக்கு மாளிகை அல்லது சொகுசு வாழ்க்கை கேட்கவில்லை. அன்றாடம் உணவு தான் கேட்கிறம். அதை இந்த அரசாங்கம் தரவில்லை. தற்போது எனது 4 பிள்ளைகளுக்கும் காலை உணவு இல்லை. யுத்த காலத்தில் கூட நாங்கள் நடமாடியதால் ஓரளவு சீவிக்க கூடியதாய் இருந்தது. சிங்களவர்கள் தமிழர்கள் எல்லோருக்கும் ஒரே நிலமைதான். எல்லோரும் உயிரைப் பாதுகாக்கவே முயற்சி செய்கின்றோம்”.

காரைநகரில் தண்ணீர் தட்டுப்பாடு பற்றி பேசிய செ. தயாக்குமார், 40வயது, “இந்த நோயை உடனடியாக இல்லாமல் செய்ய வேண்டும். பிரதானமாக இந்த நோயைக் தடுப்பதற்கு கைகளை கழுவ வேண்டும், ஆனால் எமக்கு தண்ணீர் தடுப்பாடு உள்ளது,” என்றார். “அரசாங்கம் அதைச் செய்யவில்லை. நாங்கள் ஒரு லீட்டர் 80 சதத்துக்கு தண்ணீரை வாங்குகின்றோம். வாரத்துக்கு 500 லீட்டர் தண்ணி பௌசர் மூலம் கொண்டு வந்து எமக்கு விற்பனை செய்வார்கள். அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு குளித்துக் கழுவி துப்புரவாக இருப்பது?” என அவர் கேட்டார்.

கிளிநொச்சியில் வட்டக்கச்சியைச் சேர்ந்த முத்து, 60, ஒரு விவசாயி ஆவார். “நான் தோட்டம் செய்தேன். இங்கு கிணறுகள் வற்றியதால் தண்ணீர் இல்லை. எவ்வாறு தோட்டம் செய்ய முடியும்? தோட்டம் செய்தாலும் காய்கறிகளை விற்க முடியாது. ஒரு நேரம் சாப்பிட்டும் இன்னொரு நேரம் சாப்பாடு இல்லாமலும் வாழ்நாளைக் கழிக்கின்றோம். தனியார் சிலர் 2 கிலோ அரிசி, 2 கிலோ கோதுமை மா மற்றும் 1 கிலோ சீனியும் ஒரு தடவை தந்தார்கள். இதனுடன் எவ்வளவு காலம் சீவிக்க முடியும்? அரசாங்கத்திடம் எதுவும் கிடைக்கவில்லை,” என அவர் கூறினார்.

தமிழ் தேசியவாத கட்சிகள் மீது அதிருப்தியை வெளியிட்ட அவர், “தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கு மட்டுமே வருகின்றார்கள். இப்போது எங்களை வந்து பார்க்கவில்லை. அவர்கள் மீண்டும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு கோரிக்கை விடுக்கின்றார்கள். இதனால் எங்களுக்கு என்ன பிரயோசனம்? என அவர் கேள்வியெழுப்பினார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மு. சந்திரகுமாரும் தேர்தல் வேலைக்கு மட்டும் வருகின்றார். இப்போது எங்கே என்று தெரியவில்லை. அரசாங்கம் தேர்தலை நடத்துவதற்கு திட்டமிடுகின்றது. ஆனால் மக்கள் உயிருடம் இருந்தால் தானே வாக்களிக்க முடியும். விலைவாசி அதிகரித்துள்ளது. அரிசி இங்கு 140 முதல் 150 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. மரக்கறிகள் வீட்டுக்கு அருகில் வந்து விற்பனை செய்கின்றார்கள், ஆனால் வாங்குவதற்கு எம்மிடம் காசு இல்லை.” என்றார்.

எனது தொழில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விற்னை செய்வது, எனக் கூறிய கிளிநொச்சியைச் சேர்ந்த விவசாயியான நடேசு, இப்போது யாரும் வாங்குவதற்கு இல்லாததினால் எனது தொழில் வீழ்ச்சியடைந்துவிட்டது, என்றார். “கையில் இருக்கும் காசு முடிந்த பின்னர், யாரிடமாவது கடன்பட்டு வாழ வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஊரில் அன்றாடம் கூலித் தொழில் செய்து வாழும் குடும்பங்கள் பட்டினிக்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். சில தனியார் அமைப்புகள் கொடுக்கும் 2 கிலோ அரிசி, மா, சீனி போன்ற பொருட்களுடன் எத்தனை நாட்கள் வாழ முடியும்? இந்த நிலை தொடர்ந்தால் மக்கள் மரணிக்க வேண்டியதுதான். காய்கறித் தோட்டம் செய்யும் பல விவசாயிகள் விளைச்சலை அறுவடை செய்ய முடியாமல் கைவிட்டுள்ளார்கள். ஏற்றுமதி இல்லை. அந்த விவசாயிகள் கடனாளிகளாக மாறிவிட்டார்கள். எவ்வளவு நாட்களுக்கு இந்ந நிலை தொடரும் என தெரியாது. யுத்த காலத்திலும் கூட இவ்வாறான கஸ்ட்டங்கள் வந்தன ஆனால் நாம் ஓரளவு தாண்டக் கூடியதாய் இருந்தது. ஆனால் இது உலகம் பூராவும் ஏற்பட்டுள்ளதால் எங்களால் கடக்க முடியவில்லை.”

ஒரு அச்சகப் பணியாளரான ராஜா, தான் வேலை செய்யும் நிறுவனம் மார்ச் மாதம் வரை சம்பளம் தந்துவிட்டு, மூன்று மாதங்களுக்கு வீட்டில் நிற்குமாறு கடிதம் அனுப்பியுள்ளது, என்றார். “இது மறைமுகமான ஒரு வேலை நீக்க கடிதமாகும். கொரோனா முடிந்து மீண்டும் எம்மை வேலைக்கு சேர்த்துக்கொள்வார்களா இல்லையா தெரியாது. அவ்வாறு சேர்த்துக் கொண்டாலும் பழையமாதிரி முழுமையான சம்பளம் தருவார்களா என்று கூட தெரியாது. வேலை இல்லாவிட்டால் எனது குடும்பம் நடுத்தெருவிலேதான் நிற்க வேண்டியிருக்கின்றது. ஏற்கனவே பல தேவைகளுக்காக பட்ட கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும்,” என விளக்கினார்.

யாழ்ப்பாணத்திலிருந்து முகிலன்.