உரித்தை வெளிப்படுத்த முடியாத காணிகளை கையகப்படுத்துவது தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தானி அறிவித்தல் குறித்து மக்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் செயலமர்வு ஒன்று யாழ்ப்பாணம் – வெற்றிலைக்கேணி பகுதியில் நேற்று (02) இடம்பெற்றது.
கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானியில், அன்றைய தினத்தில் இருந்து 3 மாதங்களுக்குள் ‘வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள காணிகள் தொடர்பான உரிமை கோரலை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஆட்சேபனைகள் முன்வைக்கப்படாத காணிகள் அரசுக்குரிய காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் என்றும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் சுமார் 5,900 ஏக்கர் காணிகள் இந்த வர்த்தமானியின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்தநிலையில், குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மருதங்கேணி பிரதேச மக்களை தெளிவுப்படுத்தும் செயலமர்வு ஒன்று ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்டோரினால் நேற்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த வர்த்தமானி அறித்தலை ரத்து செய்யுமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் காணி உரித்தை உறுதிப்படுத்த முடியாமல் போனால் குறித்த காணி அரசுடமையாக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இடம்பெயர்வுகளின் போது காணி உறுதி பத்திரத்தை மறந்து சென்றவர்கள், வருடாந்தம் உரிய ஆவணங்களை புதுப்பிக்க தவறியவர்கள் மற்றும் உறவினர்கள் அல்லது மூதாதையர்களின் பெயர்களில் காணி உறுதி பத்திரம் காணப்படுகின்றமை போன்றவற்றால் காணிகள் அரசுடமையாக்கப்படும் சூழல் நிலவுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதனை தடுப்பதற்காக உரிய ஆவணங்கள் பெறப்பட வேண்டும் என்றும் அவர் பொது மக்களுக்கு விளக்கியிருந்தார்.அதேநேரம் இதன்போது கருத்துரைத்த சட்டத்தரணி கேசவன் சயந்தன், காணி உறுதிப்பத்திரம் இல்லாதவர்கள் அதற்கான ஆவணங்களை தயார்ப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.



